பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு சிறப்பு விதிவிலக்கு ஏதும் கிடையாது: அமெரிக்கா

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு சிறப்பு விதிவிலக்கு ஏதும் கிடையாது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

கனடாவுடனான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை தொடர்பான விசாரணை விரைவில் அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புவதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் கடந்த ஜுன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியதால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புக்கு காரணங்களால் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு விசா வழங்கும் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசுகையில், "காலிஸ்தான் பிரிவினைவாதி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் சிறப்பு விலக்கு ஏதும் அளிக்கப்பட இயலாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கனடாவின் குற்றச்சாட்டுகளை உற்று கவனிக்கிறோம். காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன." என்று கூறியுள்ளார்,

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE