மனிதர்களிடத்தில் சோதனையைத் தொடங்க உள்ளது எலோன் மஸ்கின் நியூராலிங்க்!

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: எலான் மஸ்க் உரிமையாளராக உள்ள நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களிடத்தில் சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூளையில் பொருத்தும் வகையில் நியூராலிங்க் தயாரித்துள்ள சிப்களை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவை சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நியூராலிங்க் ஹியூமன் ட்ரையலுக்கு தானாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கான விண்ணப்பம் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் கிடைக்கிறது. மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி சோதனை மேற்கொள்ள முறையான அனுமதி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அனுமதியைப் பெற்றதாக தகவல். கடந்த மே மாதம் எஃப்.டி.ஏ அனுமதியை இந்நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏஎல்எஸ் அல்லது கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் மற்றும் கீபோர்டு கட்டுப்படுத்தப்படும் என தெரிகிறது. சுமார் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இதில் எவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

இந்த சோதனை வெற்றி பெற்றாலும் வணிக ரீதியாக நியூராலிங்க் சிப்கள் சந்தையில் விற்பனைக்கு வர பத்து ஆண்டு காலம் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ல் நியூராலிங்க் நிறுவனத்தை மஸ்க் நிறுவினார். எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப்பை நியூராலிங்க் உருவாக்கி வருகிறது. இதனை மூளையில் பொருத்துவதன் மூலம் சாத்தியமாகிறது. பல்வேறு சிகிச்சைகளுக்கு இதனை பயன்படுத்த முடியும் என மஸ்க் நம்புகிறார். முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகள் வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE