சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம் - மொராக்கோவில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறிய அளவில் காயமடைந்து உயிர் தப்பியுள்ளனர்.

நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், போலீஸார், தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகலாக அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகேஷ் பகுதி வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின.

ரபாத் முதல் காசாபிளாங்கா நகரம் வரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்பு இருப்பதால் எங்கெங்கும் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தலைநகர் ரபாத் பகுதியிலிருந்து தென்மேற்கு பகுதியான மாரகேஷ் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ரபாத், காசாபிளாங்கா, எஸ்ஸாஅவுரா பகுதிகளிலும் நன்றாக உணரப்பட்டுள்ளது.

மாரகேஷ் பகுதியைச் சேர்ந்த அப்தேல்ஹக் இல் அம்ரானி கூறும்போது, “இப்பகுதியில் கடும் நில அதிர்வை நாங்கள் உணர்ந்தோம். அதன் பின்னர்தான் அது நிலநடுக்கம் என்பதையே நாங்கள் அறிந்தோம். சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து எனது வீட்டிலிருந்து நான் வெளியே ஓடினேன். தெருக்களில் பலர் நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்து வெளியே கூடியிருந்தனர்.

குழந்தைகள், பெண்கள் அலறும் சத்தத்தைக் கேட்க முடிந்தது. நகரின் பல பகுதிகளில் மரண ஓலங்கள் எழுந்துள்ளன. அனைவரும் அதிர்ச்சியாலும், பயத்தாலும் உறைந்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் அது சரிசெய்யப்பட்டது" என்றார்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அல்-ஹைவுஸ், தரோவ்டனட் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். அதேபோல் குவார்ஸாஸாட், சிக்கவ்வா, அஸிலால், யூசோபியா, மாரகேஷ், அகாதிர், காசாபிளாங்கா பகுதிகளிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டஉயிரிழப்பு மட்டுமே தற்போது கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடங்களின் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE