நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான்

By செய்திப்பிரிவு

தனேகஷிமா: நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஜப்பான். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இதனை விண்ணில் செலுத்தியுள்ளனர் அந்நாட்டு விஞ்ஞானிகள். நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை ஆய்வு செய்வதற்கான SLIM எனும் ஸ்மார்ட் லேண்டர் மற்றும் XRISM எனும் செயற்கைக்கோள் மூலம் பேரண்டம் குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் பேரண்டத்தின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பணியில் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமைக்கு அமெரிக்காவின் நாசா உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்லிம் லேண்டர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தரையிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பாயிண்ட் லேண்டிங் எனும் தொழில்நுட்பத்தில் இந்த லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு வெறும் சில மீட்டர் தொலைவில் இருந்து இதனை லேண்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விண்வெளி ஆய்வில் இந்தத் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் விண்கலன்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. ஜப்பான் இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் ஐந்தாவது நாடாக இந்தப் பட்டியலில் இணையும்.

கடந்த மாதம் இந்தியாவின் இஸ்ரோ, நிலவில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்கியது. சுமார் 15 நாட்களுக்கு நிலவின் தென்துருவ பகுதியில் இந்த லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணியை மேற்கொண்டது. தற்போது ஸ்லீப் மோடுக்கு இரண்டும் சென்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE