கடும் விலை உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

By செய்திப்பிரிவு

கராச்சி: பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசை எதிர்த்து பாகிஸ்தான் வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று பாகிஸ்தானில் நாடு முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டனர்.

ஜமாத் - இ – இஸ்லாமி கட்சித்தலைவரும் முன்னாள் செனட்டருமான சிராஜுல் ஹக் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, வணிகர்கள், தொழில் அமைப்புகள், சந்தை கூட்டமைப்புகள், போக்குவரத்துத் துறையினர், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் வணிக மையமான கராச்சி நகரில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.300-ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் ரூ.305.56-க்கும்,டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.

பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) நிதியுதவி வழங்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் வழங்கியது. முதற்கட்டமாக 1.2 பில்லியன் டாலர் (ரூ.9,850 கோடி) நிதி வழங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி சூழல் தொடர்ந்து தீவிரமடையும்பட்சத்தில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்க மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE