சீன வரைபட சர்ச்சை: இந்தியாவின் பக்கம் நிற்கும் பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் அரசுகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் இந்த வரைபடம் உள்ளடக்கி உள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

அதோடு இந்திய நாட்டின் ஒரு பகுதியின் மீது சீனாவின் உரிமை கோரலை நிராகரித்தும் இருந்தது. இந்தியாவின் வழியில் சீனாவின் புதிய வரைபடத்தை பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் மற்றும் தைவான் நாட்டு அரசுகளும் நிராகரித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை அன்று சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக்சாய் சின் என்றும் சீனா கூறியது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அந்த துறையின் செயலாளர் அரிந்தம் பாக்சியும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE