2017 உலகம் ஒரு பார்வை: ட்ரம்ப் முதல் ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா வரை

By இந்து குணசேகர்

2017-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்... இந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் குறித்த ஒரு தொகுப்பு

அமெரிக்க அதிபராக ட்ரம்ப்

பல விமர்சனங்கள், எதிர்ப்புகள் மத்தியில் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளில் ஒன்றான 7 முஸ்லிம் நாடுகளுக்கு  (இரான், ஈராக், ஏமன், சோமாலியா, லிபியா சூடான், மற்றும் சிரியா) விசா மறுக்கப்பட்டது. ட்ரம்பின் குடியேற்ற கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

வடகொரியா - அமெரிக்கா இடையே முற்றும் மோதல்

அணுஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க புதிய பொருளாதாரத் தடையை விதித்தது. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஆணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டது. இதன் காரணமாக ட்ரம்ப்- கிம் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டன. தென் கொரியா, ஜப்பானுடன் இணைந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் நிலவியது.

குறிவைக்கப்பட்ட கத்தார்

அல் கொய்தா, இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் முஸ்லிம் பிரதர்ஹூட் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவி செய்வதாக குற்றம் சாட்டி தடை விதிப்பதாக அறிவித்தன. இதனால் இப்பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கத்தாருடனான வான் வழி மற்றும் தரைவழி, கடல்வழி போக்குவரத்துக்கு சவூதி அரேபியா தடைவிதித்துள்ளது. தூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கத்தார் குடியுரிமை பெற்றவர்கள் 14 நாள்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் கெடு விதித்தது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகளுடன் லிபியா, மாலத்தீவுகளும் சேர்ந்து கத்தாருக்கு எதிராக இந்த முடிவை அறிவித்தன.

அதிர்வலையை ஏற்படுத்திய பாரடைஸ் பேப்பர்

2017-ல் பாரடைஸ் பேப்பர்ஸ் சர்வதேச அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணக்காரர்கள் வரிச்சலுகையைப் பயன்படுத்தும் ரகசியங்களைப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேசக் கூட்டமைப்பு நவம்பர் 5 அன்று ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ என்ற ஜெர்மன் நாளிதழில் அம்பலப்படுத்தியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலக நாடுகளின் 96 பத்திரிகைகள் இணைந்து நடத்திய இந்த விசாரணையில் கடன் ஒப்பந்தங்கள், நிதி அறிக்கைகள், மின்னஞ்சல் உட்பட 70 லட்சம் ஆவணங்கள் சிக்கின.

ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா!

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 2017 செப்டம்பர் மாதப் பதிப்பில் ‘அப்பா’, ‘அண்ணா’ உள்ளிட்ட தமிழ்ச் சொற்கள், மேலும் வடை, குலாப் ஜாமுன், கீமா, மிர்ச் மசாலா போன்ற இந்திய உணவுப் பண்டங்களின் பெயர்களும் இடம்பெற்றன.

வான்வழித் தாக்குதலும், ஏமனும்

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதிப் படைகள் உதவி வருகின்றன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ஏமனில் சவுதி - ஏமன் கூட்டுப் படை தொடர்ந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதாகக் கூறி 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஏமன் அரசு கூட்டுப் படைகள் ஏமன் எல்லையை மூட உத்தரவிட்டன.

இதனால் எல்லைப் புறத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர் இதனைத் தொடர்ந்து ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட்டது.

சிரியாவிலிருந்து வெளியேறுகிறது ரஷ்ய ராணுவம்

சிரியா நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைத் சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அந்த நாட்டின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை போரில் ஈடுபட்டதால் ஐ.எஸ். அமைப்பிடமிருந்து பெரும் பகுதியை அதிபர் ஆசாத் மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட ரோஹிங்கியாக்கள் - மவுனம் காத்த ஆங் சான் சூச்சி

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

இதில் போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

மியான்மர் அரசின் இந்த ராணுவ அடக்குமுறைகளை ஐ.நா. சபை உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டித்தன. மியான்மரில் நடக்கு வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, மியான்மரில் வன்முறை குறித்து சூச்சி, 'மியான்மர் நெருக்கடி குறித்து தவறாக புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன' என்று கூறினார்.

மோசூலை கைப்பற்றிய இராக் அரசு

இராக்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த மோசூல் நகரை அந்நாட்டு அரசுப்படைகள் கைப்பற்றியுள்ளன.மோசூல் நகரில் கட்டுப்பாட்டை இழந்ததன் மூலம் இராக்கில் பெரும் சரிவை ஐஎஸ் சந்தித்தது.

தன்னாட்சி - கேட்டலோனியா

ஸ்பெயினிடம் இருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா, தனி நாடாக தன்னை பிரகடனப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்தது. அதிபர் கார்லஸ் பூஜ்டிமாண்டையும் பதவியில் இருந்து நீக்கியது.

இதற்கிடையில் நடந்து முடிந்த கேட்டலோனியா நாடாளுமன்றத் தேர்தலில் கேட்டலோனியா பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றனர்.

பதவி விலகிய ராபர்ட் முகாபே

கடந்த 1980-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. அப்போதிலிருந்து, ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பின் (இசட்.ஏ.என்.யு) தலைவரான ராபர்ட் முகாபே (93) தொடர்ந்து (37 ஆண்டுகளாக) ஆட்சி செய்து வந்தார்.

இந்நிலையில் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வாவை சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

தொடர்ந்து முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அத்துடன் பதவி விலகுமாறு ராணுவம் அவரை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து 37 ஆண்டுகள் ஜிம்பாப்வேவை ஆண்ட ராபர்ட் முகாபே பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து எம்மர்சன் ஜிம்பாம்வே அதிபராக பதவி ஏற்றார்.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்த ட்ரம்ப்

அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாகவும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்த்து பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் போராட்டங்கள் நடந்தப்பட்டன.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்