3 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்வு: வெளிநாட்டில் சிக்கிய குடிமக்களுக்கு வட கொரியா மீண்டும் அழைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கிய வட கொரிய குடிமக்கள் நாடு திரும்ப விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தளர்த்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் கடும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. ஏறக்குறைய ஓராண்டு காலம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளானது. கரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் வட கொரிய அரசு தனது நாட்டின் எல்லைப் பகுதிகளை அடைத்தது. வெளிநாடுகளில் இருந்த தனது சொந்த குடிமக்கள் கூட மீண்டும் வட கொரியாவுக்குள் அனுமதிக்கவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்தக் கட்டுப்பாட்டை வட கொரிய அரசு தளர்த்துகிறது. வட கொரியாவின் அவசர தொற்றுநோய் தடுப்பு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் குறைந்துவிட்டதால் வெளிநாட்டில் உள்ள வடகொரிய குடிமக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு திரும்புபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு, முறையாக மருத்துவ கண்காணிப்பின்கீழ் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய அரசின் இந்த அறிவிப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள குடிமக்கள் பலரும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தளர்வுகள் வடகொரிய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE