மடகாஸ்கர் மைதானத்தில் நெரிசல்: 12 பேர் பலி; 80 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

அன்டனானரிவோ: மடகாஸ்கரில் உள்ள ஒரு மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று (ஆக. 25) தொடங்கியது. மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர்.

திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தின் காவலாளிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் 11 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கான மவுன அஞ்சலியுடன் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா தொடர்ந்து நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு மடகாஸ்கரின் மகாமசினா மைதானத்தில் இதேபோன்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE