பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் மேடையில் கீழே கிடந்த தேசியக் கொடியை எடுத்து பாக்கெட்டில் வைத்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில், கீழே விழுந்து கிடந்த தேசியக் கொடியை எடுத்து பாக்கெட்டில் வைத்தார் பிரதமர் மோடி.

பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற தலைவர்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் போட்டோ எடுப்பதற்காக மேடையில் ஏறினர். அப்போது அவர்கள் அருகில் வைக்கப்பட வேண்டிய தேசியக் கொடிகள் மாநாட்டு மேடையின் தரையில் கிடந்தன. இதைப் பார்த்த பிரதமர் மோடி இந்திய தேசியக் கொடியை கீழே குனிந்து எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்தார்.

இதையடுத்து, தனது நாட்டு கொடியை மிதித்துவிட்டதை உணர்ந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அதை எடுத்து உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தார். அவர் பிரதமர் மோடியிடம் இருந்த இந்திய தேசியக் கொடியை வாங்க முன்வந்தார். ஆனால், அவரிடம், ‘இருக்கட்டும்’ என கூறி தனது பையில் வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி.

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உட்பட பல துறைகளில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE