பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் மோடியின் 5 பரிந்துரைகள்

By செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க் : பிரிக்ஸ் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 5 பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளார்.

15-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. தென்னாப்ரிக்க அதிபர் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி ஆற்றிய உரை விவரம்: "15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோகன்னஸ்பர்க் என்ற அழகான நகரத்தில் நானும் எனது தூதுக்குழுவும் மீண்டும் ஒரு முறை இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நகரம் இந்திய மக்களுக்கும் இந்திய வரலாற்றுக்கும் மிகவும் ஆழமான, வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள டால்ஸ்டாய் பண்ணை 110 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் கட்டப்பட்டது. இந்தியா, யூரேசியா மற்றும் ஆஃப்பிரிக்காவின் மகத்தான கருத்துக்களை ஒன்றிணைத்ததன் மூலம், மகாத்மா காந்தி நமது ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில், பிரிக்ஸ் மிக நீண்ட மற்றும் மகத்துவமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் நாங்கள் பல சாதனைகளை செய்துள்ளோம். எமது புதிய வளர்ச்சி வங்கி உலகளாவிய தென்பகுதி நாடுகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. அவசரத் தேவைக்கான இருப்பை உறுதி செய்திருப்பதன் மூலம் நாங்கள் ஒரு நிதிப் பாதுகாப்பு பிணைப்பை உருவாக்கியுள்ளோம். பிரிக்ஸ் செயற்கைக்கோள் அமைப்பு, தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், மருந்து தயாரிப்புகளுக்கு பரஸ்பர அங்கீகாரம் போன்ற முன்முயற்சிகள் மூலம், பிரிக்ஸ் நாடுகளின் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற கூட்டமைப்பின் தலைவர்கள்

இளைஞர் மாநாடு, பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள், சிந்தனைக் குழுக்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம், அனைத்து நாடுகளுக்கும் இடையிலான, மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தி வருகிறோம். ரயில்வே ஆராய்ச்சி நெட்வொர்க், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, ஆன்லைன் பிரிக்ஸ் தரவுத்தளம், ஸ்டார்ட்அப் மன்றம் ஆகியவை பிரிக்ஸ் நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு புதிய திசையை வழங்க, இந்தியா வழங்கிய சில பரிந்துரைகளாகும். இவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நமது நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த சில பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவது, விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு. பிரிக்ஸ் செயற்கைக்கோள் விண்கலத்தில் நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். இதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று பிரிக்ஸ் விண்வெளி ஆய்வு கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கலாம். இதன் கீழ், விண்வெளி ஆராய்ச்சி, வானிலைக் கண்காணிப்பு போன்ற துறைகளில் உலகளாவிய நன்மைக்காக நாம் பணியாற்ற முடியும்.

எனது இரண்டாவது பரிந்துரை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு. பிரிக்ஸ் அமைப்பை எதிர்காலத்திற்குத் தயாராகும் அமைப்பாக மாற்றி, நமது சமூகங்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டும். இதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவில், தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதற்காக அறிவு பகிர்வுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். மேலும், பள்ளி மாணவர்களிடையே கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, நாடு முழுவதும் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை உருவாக்கியுள்ளோம். மொழித் தடைகளை நீக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழி தளமான பாஷினி இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி போட கோவின் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அதாவது ‘இந்தியா ஸ்டாக்’ மூலம் பொது சேவை வழங்குவதில் புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய பலம். இந்தியாவில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு, இந்தப் பன்முகத்தன்மையின் சோதனையில் இருந்துதான் வெளிப்படுகிறது. எனவே இந்தத் தீர்வுகளை உலகின் எந்த மூலையிலும் எளிதாக செயல்படுத்த முடியும். இந்தச் சூழலில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்தத் தளங்கள் அனைத்தையும் பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

எனது மூன்றாவது பரிந்துரை என்னவென்றால், ஒருவருக்கொருவர் நம் திறன்களை அடையாளம் காண நாம் ஒன்றாக இணைந்து அதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நாம் ஒருவருக்கொருவர் வளர்ச்சிப் பயணத்தில் துணைபுரிய முடியும். எனது நான்காவது பரிந்துரை புலிகளைப் பற்றியது. பிரிக்ஸ் அமைப்பின் ஐந்து நாடுகளிலும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஏராளமான புலிகள் காணப்படுகின்றன. சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் கீழ், அவற்றின் பாதுகாப்பிற்காக நாம் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம். எனது ஐந்தாவது பரிந்துரை பாரம்பரிய மருத்துவம் பற்றியது. நம் நாட்டில் பாரம்பரிய மருத்துவத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. நாம் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய மருத்துவத்தின் களஞ்சியத்தை உருவாக்க முடியுமா? என கலந்தாலோசிக்க வேண்டும்.

தென்னாப்பிரிக்கா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதை மனதார வரவேற்கிறோம். இது தற்போதைய காலத்தின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தேவையும் கூட. இந்தியா தனது ஜி-20 தலைமையின் கீழ் இந்தத் தலைப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளது. "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற தாரக மந்திரத்தில் அனைத்து நாடுகளுடனும் இணைந்து முன்னேறுவதே எங்கள் முயற்சி. இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சிமாநாட்டில் 125 நாடுகள் பங்கேற்று, தங்கள் கவலைகளையும் முன்னுரிமைகளையும் பகிர்ந்து கொண்டன.

ஆஃப்பிரிக்க யூனியனுக்கு ஜி-20 அமைப்பில் நிரந்தர உறுப்புரிமை வழங்கவும் முன்மொழிந்துள்ளோம். அனைத்து பிரிக்ஸ் கூட்டாளிகளும் ஜி 20 இல் ஒன்றாக உள்ளனர் என்று நான் நம்புகிறேன். எங்கள் திட்டத்தை அனைவரும் ஆதரிப்பார்கள். இந்த முயற்சிகள் அனைத்திற்கும் பிரிக்ஸ் அமைப்பில் சிறப்பு இடம் அளிப்பது உலகளாவிய தென்பகுதி நாடுகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. இதில் ஒருமித்த கருத்துடன் முன்னேறுவதை வரவேற்கிறோம். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் தலைமையின் போது, பிரிக்ஸ் நிறுவனத்தை பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் ஒருமித்த தீர்வுகளை உருவாக்குவதாக வரையறுத்தோம். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிக்ஸ் - தடைகளை உடைத்தல், பொருளாதாரங்களுக்கு புத்துயிர் அளித்தல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்று நாம் கூறலாம். இந்தப் புதிய வரையறையை அனைத்து பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து, அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் நாம் தொடர்ந்து தீவிரமாக பங்களிப்போம்." இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்