தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலை உடுத்தி வந்த 700 இந்திய வம்சாவளி பெண்கள்: ஆடல், பாடலுடன் களை கட்டிய லண்டன்

By செய்திப்பிரிவு

லண்டன்: கைத்தறி நெசவாளர்களை நினைவுகூர்ந்து அவர்களை கவுரவிக்கும் விதமாக, தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்ததன்படி தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்கள் 700 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடினர்.

பல மாநிலங்களைச் சேர்ந்த அந்த பெண்கள், பல வண்ணங்களில் தங்கள் பாரம்பரிய சேலைகளை அணிந்து பிரபலமான டிரபல்கர் சதுக்கத்தில் இருந்து பார்லிமென்ட் சதுக்கம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் தீப்தி ஜெயின் ஏற்பாடு செய்திருந்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளி பெண்கள் ஆடல், பாடலுடன் சென்றனர். அந்த வழியாக சென்ற லண்டன் நகர மக்கள் அவர்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

ஊர்வலம் சென்ற பாதையில், சாலையோரம் ஒருவர் கிடார் இசைக்கருவி வாசித்து கொண்டிருந்தார். அவரது இசைக்கேற்ப அங்கு சிறிது நேரம் 700 பெண்களும் நடனமாடினர். அதைப் பார்த்து பலரும் வியந்தனர். ஊர்வலத்தில் ‘காஷ்மீர் மெயின் கன்னியாகுமரி’ என்ற பாலிவுட் பாடலை பாடியபடி 700 பெண்களும் நடனமாடி சென்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

குஜராத்தைச் சேர்ந்த சுலேகா தேவி கூறும்போது, ‘‘ இன்னும் கூட நாங்கள் இந்திய கலாச்சாரத்துடன் வாழ்கிறோம். இந்தியாவில் உள்ள நெசவாளர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம்’’ என்றார். மேற்கு வங்கத்தை சேர்ந்த ரின்னா தத்தா என்ற பெண் கூறும்போது, ‘‘இந்தியாவில் இப்போது எங்கள் உறவினர்கள் ஜீன்ஸ் அணிய தொடங்கியுள்ளனர். அடுத்த தலைமுறையினர் சேலையை பயன்படுத்த மாட்டார்களோ என்ற அச்சம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE