ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில் அமெரிக்காவில் அரிசி வாங்க சூப்பர் மார்க்கெட்களில் அலைமோதும் கூட்டம்

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மக்கள் முண்டியடித்து அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒருவாரமாக அமெரிக்காவில் அரிசிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அங்கு அரிசி விலை உயர்ந்து வருகிறது. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலிருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE