மாயமான சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் பதவி நீக்கம்

By செய்திப்பிரிவு

பீஜிங்: காதல் விவகாரம் காரணமாக மாயமானதாக கூறப்பட்டு வந்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை.

கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்தத் தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து ‘எங்கே கின் கேங்?’ என்று சர்வதேச ஊடகங்களும், சீன மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கினர். கின் கேங் மாயமானதற்கு பத்திரிகையாளர் ஃபூ சிஸாடியானுடன் அவர் கொண்ச காதல்தான் காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், சீன அமைச்சரவையிலிருந்து கின் கேங் நீக்கப்பட்டிருக்கிறார். சீன வெளியுறவு அமைச்சராக பதவியேற்று 7 மாதங்களே ஆன நிலையில், கின் நீக்கப்பட்டிருக்கிறார். கின் கேங்குக்கு பதிலாக வாங் யி வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீக்கம் குறித்து சீனாவின் சினுவா செய்தி நிறுவனம், “வாங் யி-யை வெளியுறவு அமைச்சராக நியமிக்க சீனாவின் உயர்மட்ட சட்டமன்றம் வாக்களித்தது. கின் கேங் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. கின் கேங் நீக்கப்பட்டதற்காக காரணத்தை சீன அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE