பதற்றத்துக்கு இடையே தொடர்ந்து ஏவுகணை சோதனையில் வட கொரியா தீவிரம்

By செய்திப்பிரிவு

பியாங்யாங்: கொரிய தீபகற்பத்தின் மேற்கே கடலை நோக்கி வட கொரியா ஏவுகணை பரிசோதனைகளை செய்துள்ளது.

இதுகுறித்து தென் கொரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று அதிகாலை 4 மணியளவில் கொரிய தீபகற்பத்தில் வட கொரியா மேற்கு கடலை நோக்கி ஏராளமான ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது. ஏவுகணைகள் விவரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக 1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை (SSBN) அமெரிக்கா அனுப்பி இருக்கிறது. தென் கொரியாவின் இச்செயலை எச்சரிக்கும் வகையில் வட கொரியாவின் அணு ஆயுதத் தாக்குதலுக்கு தென் கொரியாவின் கென்டக்கி கப்பல் துறை காரணமாக இருக்கலாம் என்று வட கொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வியாழக்கிழமை மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில், தொடர் ஏவுகணை சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா இதுவரை வாய்திறக்கவில்லை. கடந்த வாரம், வட கொரியா ‘ஹ்வாசோங்-18’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையை வெற்றிகரமாக பரிசோதித்தது. இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அமெரிக்கா - தென் கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகவே ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், இரு நாடுகளும் மிகப் பெரிய ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான், வட கொரியா தொடர்ந்து எவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE