தேர்தலுக்காக முன்கூட்டியே கலைக்கப்படுகிறது பாகிஸ்தான் அரசு?

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறும் என்றும், அதற்கேற்ப தற்போதைய நாடாளுமன்றம் அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் கலைக்கப்படும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதனால், நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நாட்டின் மிக முக்கிய கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக்கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப், "நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. உரிய ஆலோசனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அரசு தனது முடிவை அறிவிக்கும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய வர்த்தக அமைச்சர் நவீத் கமர், "வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும். எனவே, ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்" என்று கூறி இருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, அதன் அரசியலமைப்பு பதவிக் காலமான ஐந்தாண்டுகளை நிறைவு செய்தால், 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பாகிஸ்தான் சட்டம் என்பதால், நாடாளுமன்றத்தை 4 நாட்கள் முன்கூட்டியே கலைத்து 90 நாட்களில், அதாவது வரும் நவம்பரில் தேர்தலை நடத்த ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைவதற்கு முன்பாக காபந்து அரசு பொறுப்பேற்கும் என்றும், அதற்கேற்ப அதிகாரத்தை தான் ஒப்படைப்பேன் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இடைக்கால அரசின் கீழ் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE