ஏஐ ஆபத்துகள்... - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்கள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்துக்களை எவ்வாறு குறைப்பது என்று பரிசீலித்து வரும் சூழலில், ஐ.நாவின் இத்திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்று நியூயார்க்கில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரிட்டன் தலைமையேற்று நடத்துகிறது. கூட்டத்தின் தலைவராக பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

முன்னதாக, ஜெனீவாவில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் நடந்த 'சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு' என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில், “எங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதேவேளையில் எங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை” என்றும் ஒப்புக்கொண்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE