“பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறுவதை தலிபான்கள் தடுக்க வேண்டும்” - அமெரிக்கா

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: “பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கனிஸ்தான் மாறுவதை தடுக்கும் பொறுப்பு, தலிபான்களுக்கு இருக்கிறது” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம், ஆப்கானிஸ்தான் அரசை ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகக் கேட்டுக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மில்லர், "குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பதில் அளிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறுவதை தடுக்கும் பொறுப்பு தலிபான்களுக்கு இருக்கிறது என்று அமெரிக்கா நம்புகிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என்று கூறினார்.

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அமெரிக்க டாலருக்குப் பதில் தங்கள் நாட்டு நாணயத்தின் மூலம் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மில்லர், அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் நிறைவேற்ற முடியாததற்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவே காரணம் எனும் நிலையில், இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மில்லர், "ரஷ்யா மற்றும் சீனாவைத் தவிர அனைத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா தொடர்ந்து மீறுவதை கண்டித்தும், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நிகழ்த்துவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு அழைப்பு விடுத்து வாக்களித்தனர். வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்வு காணும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE