ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்: பிரான்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரான்ஸின் முன்னணி நாளிதழான ‘லெஸ் இகோ'வுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அரங்கில் மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, தெற்கு பிராந்திய நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மிக நீண்ட காலமாக தெற்கு பகுதி நாடுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பன உள்ளிட்ட பல்வேறு தகுதிகளைப் பெற்றிருக்கும் இந்தியாவுக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் இல்லை. அப்படியிருக்கும்போது உலகத்துக்காக பேசுகிறோம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் எப்படி கூற முடியும்? பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். இதற்காக ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அனைத்து கடல் பிராந்தியங்களிலும் பாதுகாப்பு, வளர்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும். இதன்படி இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்த பிராந்தியத்தில் இந்தியாவும் பிரான்ஸும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. நாங்கள் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் செயல்படவில்லை. சர்வதேச சட்ட விதிகளைப் பின்பற்றி சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்யவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக கடல் பிராந்திய பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்பட வேண்டும்.

உக்ரைன் போர்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஜப்பானில் அண்மையில் சந்தித்துப் பேசினேன். அதன்பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன். இருவரிடமும் போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இது போருக்கான காலம் கிடையாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இதை பலமுறை எடுத்துரைத்து இருக்கிறோம். அமைதி பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போரை நிறுத்த எங்களால் முயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE