''நேட்டோ நாடுகள் பனிப்போர் காலத்திற்கு திரும்புகின்றன'': ரஷ்யா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: நேட்டோ நாடுகள் பனிப்போர் கால திட்டங்களுக்கு திரும்புவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "நிலம் மற்றும் அதிகாரத்தின் மீது புதின் மோகம் கொண்டிருந்தார். இதில் உக்ரைன் மீது மிருகத்தனமான போரை கட்டவிழ்த்துவிட்டபோது, ​​அவர் நேட்டோ உடைந்துவிடும் என்று பந்தயம் கட்டினார். ஆனால் அவர் தவறாக நினைத்தார். நேட்டோ அதன் வரலாற்றில் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது. அதிக ஆற்றல் கொண்டது இது எங்களது எதிர்காலத்துக்கு முக்கியமானது” என்று கூறினார்.

உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் எப்போது நேட்டோவில் உக்ரைன் இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, பனி போர் கால திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திரும்பியுள்ளன என்பதை இந்த மாநாடு நிரூப்பிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேட்டோ மாநாடு குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரோவ் கூறும்போது, “நேட்டோ மாநாடு காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படும். அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் நேரடி ராணுவ மோதலுக்கான அபாயத்தை உருவாக்குகின்றன. இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வில்னியஸ் நேட்டோ மாநாட்டின் முதல் நாளில் உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE