ரஷ்ய அதிபர் புதினின் ஆடம்பர ரயில்: கசிந்த புதிய தகவல்கள்

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்தும் ஆடம்பர ரயில் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதினின் குற்ற நடவடிக்கைகள், போர்க் குற்றங்கள் என்று தொடர் செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று, உக்ரைன் போருக்குப் பின்னர் விமான பயணங்களை தவிர்த்து ஆடம்பர ரயிலில்தான் புதின் பயணங்களை மேற்கொள்கிறார் என்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. 'கோஸ்ட் ட்ரெயின்’ (GHOST TRAIN) என்று அழைக்கப்படும் அந்த ரயிலில் உடற்பயிற்சிக் கூடங்கள், மசாஜ் நிலையங்கள், அழகு சாதன மையம் , ஆடம்பர குளியலறைகள் உள்ளிட்டவை உள்ளன.

அந்தத் தகவலின்படி , புதினின் இந்த ரயில் தற்போது 60 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில் ‘ஆன்டி ஏஜிங் மெஷின்கள்’, நுரையீரல் வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மேலும், ரயிலின் சில பகுதிகள் துப்பாக்கிக் குண்டுகளை தாங்கும் வகையில் கவசத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர வசதிகளை தாண்டி புதின் இந்த ரயிலை பயன்படுத்துவதற்கு காரணம், விமானங்களைப் போல் இந்த ரயிலை கண்காணிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. புதின் பயன்படுத்தும் இந்த ரயிலை போல் ரஷ்யாவில் இன்னும் சில ரயில்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், புதின் உயிர் பயத்தின் காரணமாக விமான பயணங்களை தவிர்த்து வருவதாகவும், அதனால்தான் இந்த ஆடம்பர ரயிலை அவர் பயணிப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE