கேர்ள் ப்ரெண்ட்டுக்கு ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த இத்தாலி முன்னாள் பிரதமர்

By செய்திப்பிரிவு

ரோம்: இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமரும், இத்தாலி அரசியலின் கிங் மேக்கருமாக இருந்த மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, தனது கேர்ள் ப்ரெண்ட்டுக்கு 900 கோடி ரூபாய் சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்.

இத்தாலியில் மூன்று முறை பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. 86 வயதான இவர், ரத்தப் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் 12ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரின் சொத்துக்கான உயில் சில தினங்கள் முன் அவரின் ஐந்து குழந்தைகள் முன் வாசிக்கப்பட்டது. அதன்படி, ஃபின்இன்வெஸ்ட் என்று பெர்லுஸ்கோனி குடும்பம் நடத்தி வரும் கம்பெனிகளில் இருந்து இனி கிடைக்கும் பங்குகள் ஆகியவற்றை ஐந்து குழந்தைகளான மெரினா, பியர் சில்வியோ, பார்பரா, எலியோனோரா மற்றும் லூய்கி ஆகியோருக்கு சமமாக பிரித்து கொடுத்துள்ளார்.

இதேபோல், தனது சகோதரர்கள் பாவ்லோ, மார்செல்லோ டெல் உட்ரி ஆகியோருக்கு 130 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்படி உயில் எழுதி வைத்துள்ள பெர்லுஸ்கோனி, அதேசமயம் தனது காதலியான மார்டா ஃபேசினாவுக்கு 100 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்படி கூறியுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.905 கோடி.

33 வயதாகும் மார்டா ஃபேசினா பெர்லுஸ்கோனியால் நிறுவப்பட்ட ஃபோர்ஸா இத்தாலி கட்சியில் உறுப்பினராக 1994ல் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் கால்பதித்தார். 2020 முதல் பெர்லுஸ்கோனி மற்றும் மார்டா இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் மரணப் படுக்கையில் இருந்தபோது பெர்லுஸ்கோனியா மார்டாவை தனது மனைவி என்றே குறிப்பிட்டார். மார்டா, தற்போது இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி 6 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்கார அரசியல்வாதி. மீடியா உட்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர். அவர் தான் தொடங்கிய மீடியாக்கள் மூலம் இத்தாலியின் தொலைக்காட்சி அமைப்பை மாற்றியதோடு இத்தாலிய ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இப்படி, பில்லியனர், ஊடக அதிபர், தொழிலதிபர் மற்றும் பிரதமர் என பல தசாப்தங்களாக இத்தாலிய பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய பெர்லுஸ்கோனி, இத்தாலியின் பிரதமராக மூன்று முறை பணியாற்றினார். அதேபோல் வரி மோசடியில் ஈடுபட்டதாக, 6 ஆண்டுகள் அரசியலில் இருந்து தடை செய்யப்பட்டது உட்பட பல சர்ச்சைகளும் அவரை சுற்றி ஏராளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE