அமெரிக்க நாட்டுப்புறப் பாடல்கள் ஹிட் லிஸ்டில் நம்பர் 1 இடம் பிடித்த முதல் கருப்பின பாடகர்: யார் இந்த டிராஸி சேப்மேன்?

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்கப் பாடகர் ட்ரேஸி சேப்மானின் ஃபாஸ்ட் கார் (Fast Car) என்ற பாடல் அமெரிக்க நாட்டுப்புறப் பாடல்கள் ஹிட் லிஸ்டில் நம்பர் 1 இடம் பிடித்ததோடு அந்தப் பெருமையைப் பெறும் முதல் கருப்பினப் பாடகர் என்ற பெருமையையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

"உங்களிடம் ஒரு வேகமான கார் இருக்கிறது. எனக்கு அதில் எங்கு வேண்டுமானாலும் செல்ல டிக்கெட் வேண்டும்.." (You’ve got a fast car. I want a ticket to anywhere) என்று தொடங்கும் அந்தப் பாடலை ட்ரேஸி சேப்மேன் 1988-ல் எழுதி, பாடியிருந்தார். வறுமையால் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஓர் இளம்பெண் முற்படுவதுபோல் அந்தப் பாட்டின் கருப்பொருள் அமைந்திருக்கும். அப்போது அந்தப்பாடல் கருப்பின மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

இப்போது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பாடல் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்மூலம் நாட்டின் நம்பர் 1 நாட்டுப்புறப் பாடல்கள் பட்டியலில் சேப்மேனின் 'ஃபாஸ்ட் கார்' இடம்பெற்றுள்ளது. பில்போர்டின் 'கன்ட்ரி ஏர்ப்ளே சார்ட்' எனப்படும் நாட்டுப்புறப் பாடல்களுக்கான பட்டியலில் இந்தப் பாடல் திங்கள்கிழமை மதியம் முதலிடத்தை எட்டியது. லூக் கோம்ப்ஸ் என்ற இசைக்கலைஞர் பாடிப்பதிந்த வெர்சன் தான் தற்போது ஹிட்டடித்து சேப்மேனுக்கு நம்பர் 1 சாங் ரைட்டர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது.

இதுகுறித்து பில்போர்டு வெளியிட்ட அறிக்கையில், 1990-ல் Country Airplay அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்த இரண்டாம் கருப்பினப் பாடகர் சேப்மேன் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக 1990-ல் டேன் சீல்ஸ் என்பவர் சாம் குக்கின் குட் டைம்ஸ் (1964-ல் இயற்றப்பட்டது) பாடலைப் பாடி முதலிடம் பிடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

1988-ல் இந்தப் பாடல் வெளியானபோது பில்போர்ட் சார்ட்டில் ஹாட் 100 பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்திருந்தது. நெல்சன் மண்டேலாவின் 70-வது பிறந்தநாளை ஒட்டி லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் சாப்மேன் இந்தப் பாடலைப் பாட அது அடுத்தக்கட்ட பிரபலத்தை எட்டியது.

ட்ரேஸி சேப்மேன் இயற்றி, பாடிய ஃபாஸ்ட் கார் பாடல் பல ஆண்டுகளாக பலராலும் வெவ்வேறு வெர்சன்களாகப் பாடப்பட்டாலும் கூட அதுதான் தற்போது LGBTQ - தன்பாலின உறவாளர்களின் ஆந்தமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சேப்மேன்?- 1964ல் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் க்ளெவ்லேண்ட் பகுதியில் பிறந்தவர் ட்ரேஸி சேப்மேன். அவருக்கு 4 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். மூன்று வயதாக இருக்கும் போதே அவருக்கு அவரது தாயார் சில இசைக் கருவிகளை வாங்கிக் கொடுத்தார். விளையாட்டாக இசைக் கருவிகளுக்கு அறிமுகமான ட்ரேஸி 8 வயதில் கிட்டார் வாசிக்கக் கற்றுக் கொண்டார். அவர் வாழ்ந்த பகுதியில் அவருக்கு இன ரீதியாக ஏற்பட்ட மோசமான அனுபவங்கள், அடக்குமுறைகள் அவரை இசைக்கு வரிகளைக் கொடுக்கத் தூண்டியுள்ளது. கருப்பின மக்களின் துயரங்களையும், வறுமையின் இடர்பாடுகளையும் வார்த்தைகளால் வடித்த அவர் அதற்கு இசையும் அமைத்து புகழின் வெளிச்சத்துக்கு வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE