பாலஸ்தீனத்தின் ஜெனின் பகுதியில் 2 நாட்களாக நடந்தது என்ன? - ஒரு விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

”அவர்கள் ஜெனின் நகரின் கட்டமைப்பை அழித்துவிட்டார்கள்... அவர்களது செயல்பாடுகளால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.” என்கிறார் பாலஸ்தீனரான முஸ்தபா.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தின் ஜெனின் நகர வாசிகள் நிவாரண முகாம்களில் இரண்டு நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 12 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினரும் இதில் பலியாகி இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தமான தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்களை தாக்குகிறார்கள். ஆம்புலன்ஸ்களை தாக்குகிறார்கள்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2 நாட்களாக ஜெனின் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “ தீவிரவாத தடுப்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது .வீரர்கள் ஜெனின் பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்" என்று இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஜெனின் பகுதியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இஸ்ரேல் ராணுவம் முடித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதலால் ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பினர், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பின் தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீனர்களும் கொல்லப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE