பார்பி படத்துக்கு வியட்நாம் அரசு தடை: மீண்டும் சர்ச்சையான நைன் டேஷ் லைன் - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

ஹனோய்: கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமான 'பார்பி' வரும் 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள நிலையில், இப்படத்துக்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது.

பார்பி பட போஸ்டரில், தென் சீன கடலில் சீனா சர்ச்சைக்குரிய விதத்தில் உரிமை கோரும் இடங்கள் அதன் ஆளுகைக்குக் கீழ் இருப்பதுபோலவே காட்டும் வரைபடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைக் கண்டித்துள்ள வியட்நாம் அரசு, படத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் அந்தப் போஸ்டர்களை வியட்நாம் நாட்டின் பட விநியோகஸ்தர்கள் தத்தம் இணையதளங்களில் இருந்து நீக்கியுள்ளதாக 'வியட்நாம் எக்ஸ்பிரஸ்' செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வியட்நாம் திரைப்படத் துறை இயக்குநர் வி கியன் தான் கூறுகையில், "தேசிய திரைப்பட மதிப்பீட்டு கவுன்சில் 'பார்பி' பட போஸ்டரை ஆய்வு செய்தது. அதில் தென் சீனக் கடலில் வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனா தனது பிராந்தியம் எனக் கோரும் 'நைன் டாஷ் லைன்' இடம்பெற்றுள்ளது" என்றார்.'பார்பி' படத்தில் மார்காட் ராபி பார்பியாகவும், ரயான் காஸ்லிங் கென்னாகவும் நடித்துள்ளனர்.

"nine-dash line" சர்ச்சை: Nine Dash line ஒன்பது வரிக் கோடு என்பது தென்சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு ஆகும். இங்கு ஆழமற்ற கடற்பகுதிகளில் மணலை போடுவதன் மூலம் செயற்கையான தீவுகளையும் சீனா உருவாக்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் “மணல் பெருஞ்சுவர்” என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தக் கோட்டை வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. இது தொடர்பாக 2016-ல் சர்வதேச நீதிமன்றத்தை பிலிப்பைன்ஸ் நாடியது. அப்போது சர்வதேச நீதிமன்றம், நைன் டேஷ் லைனுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் ஏதுமில்லை. ஆகையால் பிலிப்பைன்ஸ் அப்பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கலாம் என்று கூறியது. ஆனால் அந்தத் தீர்ப்பை சீனா நிராகரித்தது. சீனாவுடன் இவ்விவகாரத்தில் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய 'நைன் டேஷ் லைன்' இடம்பெற்ற வரைபடத்துடன் கூடிய பார்பி பட போஸ்டர் வியட்நாமை கோபப்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வியட்நாம் அரசு ட்ரீம் ஒர்க்ஸ் பட நிறுவனத்தின் அபோமினபிள் படக் காட்சிகளை ரத்து செய்தது. அப்போதும் நைன் டேஷ் லைன் தான் காரணமாக இருந்தது. பிலிப்பைன்ஸில் அந்தப் படத்தை சுட்டிக்காடி பின்னர் ட்ரீம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் அனைத்துப் படைப்புகளையும் புறக்கணிப்போம் என்று போராட்டக்காரர்கள் கூறினர். மலேசியாவில் அந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய அக்காட்சி நீக்கப்பட்ட பின்னரே படத்தைத் திரையிட அனுமதிக்கப்பட்டது. இதனால் பார்பி படம் வியட்நாம் மட்டுமல்லாமல் பிலிப்பைன்ஸ், மலேசியாவிலும் எதிர்ப்பை சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சர்ச்சைகள் எதுவாக இருந்தாலும் சீனா தொடர்ந்து தென் சீன கடலின் பெரும் பகுதி தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறவில்லை. இதுவே சீனாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இடையேயான நீண்டகால பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE