வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக 'ஸ்லீப் அப்னியா' எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு CPAP சிபேப் எனும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
சமீபகாலமாக பைடனின் முகத்தில் சிபேப் கருவி பொறுத்தியதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிய நிலையில் அது பேசுபொருளானது. இது தொடர்பாக வெளியான பல்வேறு ஊகங்களை களையும் வண்ணம் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் பைடன் 'ஸ்லீப் அப்னியா'வுக்காக சிபேப் கருவி பயன்படுத்துகிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டே பைடன் தனக்கு 'ஸ்லீப் அப்னியா' பிரச்சினை இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை சிகோகாவில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற பைடன் புறப்பட்டபோது அவர் முகத்தில் சிபேப் கருவியின் அழுத்தத்தினால் ஏற்பட்ட சுவடு தெளிவாகத் தெரிந்தது. அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்ட வெள்ளை மாளிகை, "அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை இரவு சிபேப் கருவி பயன்படுத்தினார்" என்று கூறி அவருக்கு ஸ்லீப் அப்னியா இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 60 லட்சம் பேர் ஸ்லீப் அப்னியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 'ஸ்லீப் அப்னியா' என்னும் உடல்நலப் பிரச்னை காரணமாக இந்தியாவில் மட்டும் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
80 வயதான ஜோ பைடன் அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே மிகவும் அதிக வயது கொண்ட அதிபர் என்ற அடையாளம் பைடனைச் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லீப் ஆப்னியா என்றால் என்ன? - தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறலைத்தான் இந்த மருத்துவ வார்த்தையில் கூறுகின்றனர். Obstructive Sleep Apnea என்பதை அமெரிக்க தேசிய மருத்துவ மையம் விளக்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர், ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூங்க முடியாமல் போகிறது. சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்கு சரியான சமிக்ஞைகள் செல்லாவிட்டாலும் 'ஸ்லீப் அப்னியா' ஏற்படும். இதனை சென்ட்ரல் 'ஸ்லீப் அப்னியா' எனக் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்லீப் டிஸ்ஆர்டர் சென்டர் ஆய்வின்படி, 'ஸ்லீப் அப்னியா' சரியான எடை கொண்டோரில் 3% பேருக்கும், உடல் பருமன் கொண்டோரில் 20% பேருக்கும் ஏற்படுகிறது; பெண்களைவிட ஆண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது; பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பின்னர் இந்த பாதிப்பு ஏற்படுகிறது; இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் இதய நாளங்கள் சம்மந்தப்பட்ட நோய்களும் வரும். ஆனால், இந்த நோயின் கொடுமையே, இது இருப்போர் பலருக்கும் இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே தெரிவதில்லை. தெரியக்கூடிய சில அறிகுறிகளைக் கூட பெரும்பாலானோர் பெரிதாகக் கருதுவதில்லை.
'ஸ்லீப் அப்னியா'வின் அறிகுறிகள் என்னென்ன? சத்தமான குரட்டை, எப்போதும் உடலில் ஒருவிதமான அயர்ச்சி, மூட் ஸ்விங்ஸ், காலையில் எழுந்திருக்கும்போதே தலைவலி அல்லது எரிச்சலான மனநிலை, காலையில் வறண்ட வாய், இரவு முழுவதும் தூக்கமின்மை போன்றவை சில அறிகுறிகள்.
'ஸ்லீப் அப்னியா' எப்படி கண்டறியப்படுகிறது? - ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி 'ஸ்லீப் அப்னியா' மிதமானது முதல் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சில நேரங்களை உயிரைப் பறிக்கும் அளவுக்குச் செல்லலாம். இந்த நோய் ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிய, அறிகுறிகள் உள்ள நபரின் தூக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும். தூக்கத்தின் போது அவர் மூச்சுவிடும் நிகழ்வு எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் அவரது நோய் தீவிரம் வரையறுக்கப்படும்.
சிகிச்சை வழிமுறைகள் என்ன? - மருத்துவர்கள் ஆலோசனைப்படி தூக்கத்தின்போது ஒருவரின் சுவாசப்பாதையை சீராக வைப்பதற்கான வழிகளைக் கடைப்பிடிப்பதே சிறந்த வழி. சிலருக்கு மருத்துவர்களே சுவாசத்தை எளிதாக்கும் கருவிகளைப் பரிந்துரைப்பர். CPAP (Continuous Positive Airways Pressure) எனப்படும் கருவி ஒரு நபரின் மூக்கில் பொருத்தக் கூடியது. இது அந்த நபரின் தூக்கத்தின் போது மூக்கில் ஏற்படும் காற்றழுத்தத்தை சீராக வைத்து சுவாசப் பாதையில் மூச்சடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிலருக்கு அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தச் சொல்வார்கள்.
'ஸ்லீப் அப்னியா'விலிருந்து விடுபட... - படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக மது அருந்தக் கூடாது; உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்; தூங்கும் நேரத்தை ஒழுங்கபடுத்த வேண்டும்; புகைப்பிடித்தல் கூடவே கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும் பொதுவான வழிமுறைகளைப் பின்பற்றாமல் 'ஸ்லீப் அப்னியா' சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago