மனித குலத்துக்கு மிகச் சிறந்த சேவையாற்றுவதாக கவுரவம்: பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது

By செய்திப்பிரிவு

கெய்ரோ: எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி, இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

எகிப்து அதிபரின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். எகிப்து பிரதமர் முஸ்தபா மேட்போலி, விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். முதல் நாளில் 2 நாடுகளின் பிரதமர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டாம் நாளான நேற்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுகுறித்து எகிப்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எகிப்து அதிபர், பிரதமரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,382 கோடியை எட்டும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். எரிசக்தி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

இந்தியாவில் இருந்து அதிக அளவில் கோதுமையை இறக்குமதி செய்ய எகிப்து அரசு முடிவு செய்துள்ளது. எகிப்து அமைச்சர்கள் குழுவின் தலைமை அமைப்பில் இந்திய தரப்பில் ஒரு குழு இடம் பெறும். இதன்மூலம் இரு நாடுகளின் வர்த்தக உறவு வலுவடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, பருவ நிலை காரணமாக எகிப்தில் கோதுமை சாகுபடி அளவு குறைவாக இருக்கிறது. அந்த நாட்டின் 80 சதவீத கோதுமை தேவையை உக்ரைன் பூர்த்தி செய்து வந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனில் போர் மூண்டதால் எகிப்தில் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இக்கட்டான சூழலில் இந்தியாவில் இருந்து எகிப்துக்கு கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் பட்டியலில் எகிப்தும் இணைந்தது. கடந்த ஜன.26-ம் தேதி நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர்களுடன் சந்திப்பு: முன்னதாக எகிப்து தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதன் ஒரு பகுதியாக எகிப்து நாட்டின் ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹசன் ஆலன் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மரபுசாரா எரிசக்தி, பசுமை ஹைட் ரஜன், உள்கட்டமைப்பு, கட்டுமான துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தனர்.

ரகசிய ராணுவ ஒப்பந்தம்: மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் மட்டும் சீன அரசின் ஒரே சாலை, ஒரே மண்டலம் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவிடப்பட்டு வருகிறது. இதை விரும்பாத எகிப்து அரசு, அங்கு வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியில் இந்தியா ஆழமாக கால் பதிக்க புதிய வியூகம் வகுத்துள்ளது. இதன்படி இரு நாடுகளுக்கும் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரியில் ராஜஸ்தானில் இந்திய, எகிப்து ராணுவ வீரர்கள் கூட்டு போர் ஒத்திகை நடத்தினர்.

எகிப்தின் உயரிய விருது: எகிப்தை ஆட்சி செய்த சுல்தான் ஹூசைன் கமல் கடந்த 1915-ல் ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை தோற்றுவித்தார். 1953-ல் எகிப்து குடியரசு நாடாக உருவெடுத்த பிறகும், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. எகிப்தின் மிக உயரிய இந்த விருது, மனித குலத்துக்கு மிகச் சிறந்த சேவை யாற்றுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கழுத்தில் அணியும் விருதின் பட்டை தங்கத்தால் செய்யப்பட்டது. தீமைகளில் இருந்து எகிப்தை பாதுகாப்பது, நைல் நதியால் எகிப்தில் செழிப்பு, மகிழ்ச்சி நிலைத்திருப்பது, செல்வம், சகிப்புத் தன்மை ஆகியவற்றை குறிக்கும் சின்னங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மாணிக்க, ரத்தினக் கற்களும் அதில் பதிக்கப்பட்டுள்ளன. விருதின் பதக்கம் நைல் நதியை குறிக்கிறது.

தலைநகர் கெய்ரோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இத்தகைய சிறப்புமிக்க எகிப்தின் மிக உயரிய ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி வழங்கி கவுரவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்