போதைப்பொருட்கள் அதைப் பயன்படுத்துபவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரை, உறவுகளை எல்லாம் தாண்டி ஒரு பெரிய தேசத்தின் தேர்தல் முடிவுகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு போகும் ஆபத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் தெரிகிறது. அந்த தேசம் அமெரிக்கா.
போதைப்பொருள் பயன்படுத்தியவர். 53 வயது தொழிலதிபர், சட்டம் படித்தவர். இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். முதலாவது, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அவருடைய வருமானத்தின் ஒரு பகுதிக்கு கட்ட வேண்டிய 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரிப்பணம் கட்டவில்லை. அடுத்தது, அவர் 11 நாட்களுக்கு ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். அதுகுறித்து கேட்டபோதுதான் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்கிற தகவலை மறைத்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கான தண்டனை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைவாசம்.
அது சரி. வரி ஏய்ப்பு, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது, போதைப்பொருட்கள் பயன்படுத்துவது என்பதெல்லாம் அதிசயமா என்ன? அதுவும் அமெரிக்காவில்! என்று கேட்கலாம். குற்றம்சாட்டப்பட்டிருப்பது சாதாரண குடிமகன் அல்ல. முதல் குடிமகனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன். போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, தந்தையின் பெயரைக்கெடுத்து, அவருடைய அரசியல் எதிரிகளுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பெரும் வாய்ப்புக் கொடுத்திருப்பவர் பெயர், ஹண்டர் பைடன். அதிபர் ஜோ பைடனின் இரண்டாவது மகன்.
ஹண்டர் பைடன் பழுதுபார்க்க கொடுத்துவிட்டு திரும்ப்பெறாமல் விட்டுவிட்ட அவருடைய மடிக்கணினியிலிருந்து எடுக்கப்பட்டது என சுமார் 10,000 புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல ஹண்டர் பைடன் போதைப் பொருட்களை எடுத்துக்கொள்வது, விலை மாதர்களுடன் இருப்பது போன்றவை. தவிர, அவருடைய தாய் தந்தையர் சகோதரர் குடும்பம் ஆகியவற்றோடு இருக்கிற படங்களும் இருக்கின்றன. இதை வெளியிட்டவர் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர் மார்கோபோலோ.
» ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடியாக வலம் வரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன?
2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், தேர்தலில் பைடன் திருட்டுத்தனங்கள் செய்தார் என்று குற்றம்சாட்டி, முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், வாக்கு எண்ணிக்கை நடந்த Capitol கட்டிடத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அதன்பின்பும் விடாமல் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அதிபர் பைடன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்.
அரசின் முக்கிய பல ஆவணங்களை பைடன் அவர் வீட்டில் வைத்திருந்தார்; துணை அதிபராக இருந்து வெளிநாட்டுக் கொள்கைகளை முடிவு செய்தபோது அவரது மகன் வியாபாரத் தொடர்பில் இருந்த சீனாவுக்கும், அவர் மகன் பெரிய பதவி வகித்த Burisma நிறுவனம் இருந்த உக்ரைன் நாட்டுக்கும் சாதகமாக முடிவுகளை எடுத்தார் என்பது போல பல குற்றச்சாட்டுகள். அவற்றின் மீது விசாரணை நடைபெற்றது. சில நிரூபிக்கப்படவில்லை.
81 வயதாகும், ஜோ பைடன் என்று அழைக்கப்படும் ஜோசப் ராபினெட் பைடன், ஜூனியர் தனது 78 வயதில் அமெரிக்க அதிபரானார். அதற்கு முன் பராக் ஒபாமா அதிபராக
பதவி வகித்தபோது இரண்டு முறை அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றினார். 36 ஆண்டுகளுக்கு மேலாக செனட்டராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் உயர்ந்தபட்ச சிவிலியன் அவார்டு, Presidential Medal of Freedom with Distinction பெற்றவர். அவர் மகனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல், அவப் பெயர் சிரமம் போன்றவை கடுமையானவை என்றாலும் சிரமங்கள் அவருக்கு புதியதல்ல.
தனது 30-வது வயதிலேயே அமெரிக்க செனட் (மேலவை) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பைடன். அதற்கு அடுத்த சில வாரங்களில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு அவருடைய மனைவியும் ஒரு வயது மகளும் உயிரிழந்தனர். 2 வயதாக இருந்த ஹண்டர் பைடன் உள்பட இரு பால்ய வயது மகன்களும் படுகாயம் அடைந்தனர். 2015-ல் ஜோ பைடனின் மூத்த மகன் புற்று நோயால் இறந்தார்.
1988 மற்றும் 2008 அதிபர் தேர்தல்களில் போட்டியில் இறங்கி, பின்பு போட்டியில் இருந்து விலகிக்கொண்டார் ஜோ பைடன். 2020 தேர்தலில் அவர் வென்று பதவி ஏற்ற விழா வழக்கமான கோலாகலத்துடன் நடைபெறவில்லை. காரணம், கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்ப்பாளர் ட்ரம்பின் போராட்ட அச்சுறுத்தல்கள். அதன்பின் உக்ரைன் மீது
ரஷ்யா படையெடுப்பு அதனால் உலக அரசியலில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், அரசின் கடன் உச்சபட்ச அளவைத் தொட்டு, அதனால் ஏற்பட்ட சிக்கல் இப்படியாக வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்த பைடன் சந்திக்கும் அடுத்த பிரச்சினைதான் அவரது மகன் மீதான வழக்குகள், விசாரணைகள்.
நடுவில் வேறு ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஹண்டர் பைடன் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவிருக்கிறார் என்பதுதான் அது. ‘எனது அண்ணன் 2015-ம் ஆண்டு புற்று நோயால் இறந்த துக்கம் தாளாமல்தான் நான் போதைப்பொருட்களுக்கு பழகிவிட்டேன். இப்போது உணர்கிறேன்’ என்பது போல அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பார். பின்பு அவர், 24 மாதங்களுக்கு போதைப்பொருட்களை பயன்படுத்தாமல் ஒரு மறுவாழ்வு (போன்ற) சிகிச்சை எடுத்துக்கொள்வார். இனி துப்பாக்கியை வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ மாட்டார்.
நீதிமன்றத்துடனான இந்த ஒப்பந்த அடிப்படையில் அவர் மீது கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் விசாரணை நிறுத்தப்படும், அவர் சிறைக்குப் போவதும் தவிர்க்கப்படும் என்கிறார்கள். அனேகமாக வரும் வாரம்தான் நீதிமன்றத்தில் இதை ஹண்டர் பைடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் நீதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது.
ஹண்டர் பைடன் குற்றங்களை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்திடம் மறுவாழ்வு கேட்பது குறித்து அதிபர் ஜோ பைடனிடம் கேட்டபோது, ‘நான் என் மகன் குறித்து பெருமைப்படுகிறேன்’ என்றார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய மகனை பெரிதும் விரும்புகிறார்கள். அவன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள உதவியாக இருப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பது தவிர இதில் சொல்வதற்கு ஏதுமில்லை’ என்று முடித்துக் கொண்டிருக்கிறது.
இது கூட சாத்தியமா! என்பது போல பலரும் புருவம் உயர்த்துகிறார்கள். நீதிமன்றம் ஹண்டர் பைடனை விடுவித்தாலும் எதிர்க்கட்சிகளும் ட்ரம்பும் விடுவார்களா? நீதி செத்துவிட்டது. ஏதோ போக்குவரத்து விதிகளை மீறியவரை கையாள்வதுபோல இது இருக்கிறது என்று ட்ரம்ப் விளாசியிருக்கிறார்.
2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேலைகள் அங்கு ஆரம்பித்துவிட்டன. ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியின் சார்பாக மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். கட்சிக்குள் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அவர் போட்டியிடலாம்.
குடியரசுக் கட்சிக்குள் ட்ரம்பைக் காட்டிலும், Ron DeSantis என்பவருக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்தாலும், டொனால்டு ட்ரம்ப் விடுவதாக இல்லை. அதிபர் தேர்தலில் போட்டியிட கடுமையாக முயற்சிக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், இரண்டு முக்கிய கட்சிகளின் இருபெரும் வேட்பாளர்களும் தற்சமயம் அமெரிக்க அரசின் விசாரணைக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
பகுக்கப்பட்ட அரசு ஆவணங்களை (கிளாசிபைடு டாக்குமெண்ட்ஸ்) வீட்டில் வைத்திருந்தார்கள் என்பது இருவரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. அதிபர் பைடன் வீட்டில் எப்.பி.ஐ சோதனை நடைபெற்றது. அதே காரணத்துக்காக ட்ரம்ப் மீது வரும் ஆகஸ்ட் 14-ல் விசாரணை ஆரம்பமாகிறது.
ஜோ பைடனுக்கு இருக்கும் கூடுதல் தலைவலி அவரது மகன் ஹண்டர் பைடனால். ஹண்டர் பைடனின் பல பிரச்சினைகளுக்கு காரணம், அவரது போதைப்பொருள் பழக்கம். மகன் ஆரம்பித்த பழக்கம், அவர் தந்தை இரண்டாம் முறை அதிபராவதை தடுக்கக்கூடும் என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
ஜூன் 26-ம் தேதி (நாளை) சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago