ரஷ்யா ரத்தம் சிந்துவதை தவிர்க்க... - புதினுக்கு எதிராக பின்வாங்குவதாக அறிவித்தது வாக்னர் ஆயுதக் குழு

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது.

போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள ஆடியோவில், "ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள்.

கிளர்ச்சியாளர்களுக்கான பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டதால், ரஷ்யா முழுவதும் வாக்னர் போராளிகளின் இயக்கத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, போராளிகள் உக்ரைனில் தங்களின் கள முகாம்களுக்கு பின்வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவுக்கு முன்னேற, 200 கிலோமீட்டர்கள் (120 மைல்) தொலைவே இருந்த நிலையில், வாக்னர் ஆயுதக் குழு பின்வாங்கி இருப்பது அதிபர் புதினுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன?: ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடி தரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் ஒரு தசமத்துக்கும் குறைவானதாகத் தான் இருக்கிறது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.

ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது.

வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் ப்ரிகோஸின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘தி வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு. பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது.

இவ்வாறாக இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.

2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் புதினின் ஆதரவோடு வளர்க்கப்பட்ட வாக்னர் குழு இன்று அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அதன் பின்னணி என்னவென்று பார்த்தால், இந்த ஆயுதக் குழுவுக்கும் ரஷ்ய ராணுவத் தலைமைக்கும் இடையேயான அதிகார மோதல். உக்ரைன் போரின்போது வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்களைக் கொடுப்பதில் ரஷ்ய ராணுவம் தாமதம் செய்து வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே வாக்னர் குழு குற்றம்சாட்டி வந்தது.

கடந்த ஜூன் மாதம் முதல் தி வாக்னர் குழுவுக்கு ரஷ்ய ராணுவ அமைச்சகம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. அந்தக் குழுவில் சேரும் வீரர்கள் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தொடங்கி பல கெடுபிடிகளை அடுக்கியது. ஆனால், இதற்கு ப்ரிகோஸின் எதிர்ப்பு தெரிவிக்கலானார். இந்நிலையில்தான் உக்ரைனில் உள்ள தங்கள் படைகள் மீது ரஷ்ய ராணுவ ஏவுகணை தாக்குதல் நடத்தி 2000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளதாக ப்ரிகோஸின் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதன் நீட்சியாக நேற்று காலை அவர் ஓரு ஆடியோ எச்சரிக்கையை வெளியிட்டார். “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இந்த திருப்பத்தை உற்று நோக்கி வருகிறது.

இதனிடையே, தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் டெலிகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்ட ப்ரிகோஸின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.

அல்கொய்தா போன்ற ஆயுதக் குழுக்கள் வளர்த்துவிட்டவர்களுக்கே நெருக்கடியான கதையை இந்த உலக வரலாற்றில் உள்ளது. அப்படித்தான் இந்த வாக்னர் ஆயுதக் குழுவும் இன்று புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்