முதுகில் குத்தும் செயல்; தண்டனைக்கு தயாராக இருங்கள் - வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வாக்னர் ஆயுதக் குழுவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், "நாம் இப்போது ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த ஆயுதக் குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கப் போகிறது.

மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.

வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தேச துரோகமாகும். நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம்.
இந்த ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ரோஸ்டோவ் நகரில் 3 ரஷ்ய ஹெலிகாப்டர்களை வீழ்த்திவிட்டதாகக் கூறும் தி வாக்னர் ஆயுதக் குழுவினர் தற்போது வோரோனேஸ் பகுதியில் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தனையும் பொய்? இதற்கிடையில் வாக்னர் ஆயுதக் குழுவின் அத்தனை தகவல்களும் பொய் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ப்ரிகோஸின் மீது கிரிமினல் குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக ஆயுதப் புரட்சியைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் தூண்டுதலில் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டும். தி வாக்னர் குழுவின் உள்ளவர்கள் அனைத்து வீரர்களுமே ரஷ்ய ராணுவத்துக்கு திரும்பலாம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம். அச்சமின்றி வாருங்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள தி வாக்னர் குழுவின் அதிகாரபூர்வ அலுவலக மையம் முடக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான் ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களுக்காக உரையாற்றி இருக்கிறார். அவரது உரை சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

வாக்னர் ஆயுதக் குழு: ஐந்து தகவல்கள் - 1. தி வாக்னர் குழு என்பது தனியார் ராணுவ அமைப்பு. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர்.

2. டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் ஜெய்வ்ஜின் ப்ரிகோஸின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014ல் இந்தப் படையை உருவாக்கினர். இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக க்ரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் தி வாக்னர் ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.

3. முன்னர் இது ஒரு ரகசிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. 5000 வீரர்கள் மட்டுமே இருந்தது. 2015ல் இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

4. தி வாக்னர் குழு கிழக்கு உக்ரைனின் பக்முத் நகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகளுக்கு பெரும் பங்களிப்பை அளித்தது.

5. இப்போது வாக்னர் ஆயுதக் குழுவில் 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். உக்ரைன் போரில் இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். 2022 முதல் இவர்கள் தான் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பில் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஏனெனில் ரஷ்ய ராணுவத்தில் நேரடியாக ஆள் சேர்ப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

வாசிக்க: > எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம் - வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை; ரஷ்ய அதிபருக்கு புதிய நெருக்கடி

> வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை எதிரொலி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பலத்த பாதுகாப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்