எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம் - வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை; ரஷ்ய அதிபருக்கு புதிய நெருக்கடி

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: "ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்" என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்ததாரர்களாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.

உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்னர் ஆயுதக் குழு ஓர் எச்சரிக்கை விடுக்க புதினால் வளர்க்கப்பட்ட குழுவால் தற்போது அவருக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆம், வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் சனிக்கிழமை வெளியிட்ட ஆடியோவில் ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். நாட்டின் ராணுவத் தலைமையை வீழ்த்துவோம். நாங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். வழியில் எந்தத் தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

ஆனால் இதனை உள்நாட்டு ஊடகங்களோ ரஷ்ய தரப்போ உறுதி செய்யவில்லை. ப்ரிகோஸினை சமீப காலமான ரஷ்ய ராணுவம் மிகுந்த கெடுபிடியால் ஒடுக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது படையினை ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ப்ரிகோஸின். இந்நிலையில் தான் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில் ரஷ்ய மக்கள் கைகோத்து ராணுவத் தலைமையை வீழ்த்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே ஒருபுறம் வாக்னர் குழுவையும் சமாளித்துவந்த ரஷ்ய அதிபருக்கு இந்தப் புதிய எச்சரிக்கை புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

ரஷ்ய ராணுவம் மறுப்பு: ஆனால் பிர்கோஸினின் இந்த மிரட்டலை அசட்டை செய்யும் ரஷ்ய ராணுவம் அவர்கள் சொல்வது போல் எந்த நடமாட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தை அவர்கள் தாக்கியதாகக் கூறுவதும் பொய் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு பக்முத் பகுதியிலிருந்து தாக்குதலை நடத்த உக்ரைன் தான் சதி செய்து கொண்டிருக்கிறது என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானப்படை கமாண்டர் செர்கெய் சுரோவிகின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பிர்கோஸின் நீங்கள் உங்கள் முயற்சிகளை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். எதிரிகள் உள்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட வேண்டும் என்று காத்திருக்கின்றன. அப்படி ஏதும் நடக்காமல் அதிபரின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்படுங்கள்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்