“அனைத்து மதங்களுக்கும் இல்லமாக இருக்கிறது இந்தியா!” - அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை | முழு வடிவம்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரும் கௌரவமாகும். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இதன்பின் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அதன் முழு உரை இங்கே...

"அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரும் கௌரவமாகும். இரண்டு முறை உரையாற்றுவது மிகச் சிறந்த பெருமைக்குரிய விஷயமாகும். இந்த கௌரவத்தை அளித்தமைக்காக 140 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 2016ம் ஆண்டில் உங்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இங்கே இருந்ததை என்னால் காண முடிகிறது. பழைய நண்பர்களாக உங்கள் அன்பை உணர்கிறேன். மறுபாதியில் ஒரு புதிய நட்பின் உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிகிறது. செனட்டர் ஹாரி ரீட், செனட்டர் ஜான் மெக்கெய்ன், செனட்டர் ஓரின் ஹாட்ச், எலியா கம்மிங்ஸ், ஆல்சி ஹேஸ்டிங்ஸ் உள்ளிட்ட உறுப்பினர்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் 2016ம் ஆண்டில் இங்கு என்னைச் சந்தித்தனர், அவர்கள் இப்போது இங்கு நம்முடன் இல்லாதது வருத்தமளிக்கிறது.

சபாநாயகர் அவர்களே, ஏழு மாதங்களுக்கு முன்பு, அதாவது ஜூன் மாதத்தில் ஹாமில்டன் அனைத்து விருதுகளையும் வென்றபோது, வரலாற்றின் தயக்கங்கள் நமக்கு பின்னால் உள்ளன என்று நான் சொன்னேன். இப்போது, நமது சகாப்தம் ஒரு சந்திப்பில் இருக்கும்போது, இந்த நூற்றாண்டுக்கான நமது அழைப்பைப் பற்றிப் பேச நான் இங்கு வந்துள்ளேன். நாம் பயணித்த நீண்ட மற்றும் வளைந்த பாதையில், நட்பின் சோதனையைச் சந்தித்துள்ளோம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்ததிலிருந்து நிறைய மாறிவிட்டது.

ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை ஆழப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாடு போன்ற பல விஷயங்கள் அப்படியே உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் இந்தியா என்னும் மற்றொரு AI-ல் இன்னும் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, மக்களோடு தொடர்ந்து இணைந்திருப்பதும், அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களின் நாடித்துடிப்பை உணர்வதும்தான் ஜனநாயகத்தின் அழகு. மேலும், இதற்கு நிறைய நேரம், ஆற்றல், முயற்சி மற்றும் பயணம் தேவை என்பதை நான் அறிவேன். இது ஒரு வியாழக்கிழமை பிற்பகல் - உங்களில் சிலருக்கு வெளியே செல்லும் நாளாகும். எனவே, உங்கள் நேரத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த மாதம் நீங்கள் எவ்வளவு பரபரப்பாக இருந்தீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

துடிப்பான ஜனநாயகத்தின் குடிமகன் என்ற முறையில், ஒரு கடினமான பணியில் சபாநாயகர் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள முடியும். ஆர்வம், இணக்கம் மற்றும் கொள்கை ஆகியவற்றுக்கிடையே உள்ள போராட்டங்களுடன் என்னால் தொடர்புபடுத்த முடியும். கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களின் விவாதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டாட நீங்கள் இன்று ஒன்றிணைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு வலுவான இருகட்சி கருத்தொற்றுமை ஏற்படும் போதெல்லாம் உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீட்டில் கருத்துப் போட்டி இருக்கும் - இருக்க வேண்டும். ஆனால், நம் தேசத்திற்காக பேசும்போது நாமும் ஒன்றாக ஒன்றிணைய வேண்டும். இந்த விஷயத்தில் உங்களால் முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

பிரதமர் மோடி - கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் அடித்தளம் சமமான மக்கள் கொண்ட தேசம் என்ற பார்வையால் ஈர்க்கப்பட்டது. வரலாறு முழுவதும், அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள மக்களை அரவணைத்துள்ளது. மேலும், அமெரிக்க கனவில் அவர்களை சம பங்காளிகளாக்கியுள்ளீர்கள். இந்தியாவில் வேர்களைக் கொண்ட கோடிக்கணக்கானவர்கள் இங்கே உள்ளனர். அவர்களில் சிலர் இந்த அறையில் பெருமையுடன் அமர்ந்திருக்கின்றனர். சரித்திரம் படைத்த ஒருவர் என் பின்னால் இருக்கிறார்.

சமோசா காகஸ் இப்போது இந்த அவையின் பகுதியாக உள்ளது என்று எனக்குச் சொல்லப்பட்டது. இது வளர்ந்து இந்திய உணவு வகைகளின் முழு பன்முகத்தன்மையையும் இங்கே கொண்டு வரும் என்று நம்புகிறேன். இரண்டு நூற்றாண்டுகளாக, சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கையின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உத்வேகம் அளித்துள்ளோம். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதிக்காக உழைத்த பலரையும் நாம் நினைவில் கொள்கிறோம். அவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லூயிஸுக்கும் இன்று எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன்.

ஜனநாயகம் என்பது நமது புனிதமான மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளில் ஒன்றாகும். இது நீண்ட காலமாக பரிணாம வளர்ச்சியடைந்து, பல்வேறு வடிவங்களையும் அமைப்புகளையும் எடுத்துள்ளது. ஆனால், வரலாறு நெடுகிலும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

ஜனநாயகம் என்பது சமத்துவத்தையும் கண்ணியத்தையும் ஆதரிக்கும் உணர்வாகும்.

ஜனநாயகம் என்பது விவாதத்தையும் உரையாடலையும் வரவேற்கும் கருத்தாகும்.

சிந்தனைக்கும், கருத்துக்கும் சிறகுகள் கொடுக்கும் கலாச்சாரம்தான் ஜனநாயகம்.

பழங்காலத்திலிருந்தே இத்தகைய விழுமியங்களை இந்தியா கொண்டிருக்கிறது. ஜனநாயக உணர்வின் பரிணாம வளர்ச்சியில், இந்தியா ஜனநாயகத்தின் தாயாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது பழமையான வேதங்கள், உண்மை ஒன்று, ஆனால் ஞானிகள் அதை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றன. இப்போது, அமெரிக்கா பழமையான ஜனநாயக நாடு. இந்தியாவோ மிகப்பெரிய ஜனநாயக நாடு. நமது கூட்டணி ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. நாம் ஒன்றிணைந்து, உலகிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தையும், எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த உலகத்தையும் கொடுப்போம்.

கடந்த ஆண்டு, இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஒவ்வொரு மைல்கல்லும் முக்கியமானது, ஆனால் இது சிறப்பு வாய்ந்தது. ஒருவருக்குப் பின் ஒருவர் என, ஆயிரம் ஆண்டுகால அந்நிய ஆட்சிக்குப் பிறகு, 75 ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திரப் பயணத்தை கொண்டாடினோம். இது ஜனநாயகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்லாமல், பன்முகத்தன்மையின் கொண்டாட்டமும் ஆகும். அரசியலமைப்புச் சட்டம் மட்டுமல்லாமல், அதன் சமூக அதிகாரமளித்தல் உணர்வும் இதில் உள்ளது. நமது போட்டி என்பது கூட்டுறவு கூட்டாட்சி மட்டுமல்லாமல், நமது இன்றியமையாத ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாகும்.

எங்களிடம் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. ஆமாம், நீங்கள் கேட்டது சரிதான்- இரண்டாயிரத்து ஐந்நூறு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் இருபது வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. எங்களிடம் இருபத்திரண்டு அலுவல் மொழிகளும், ஆயிரக்கணக்கான கிளைமொழிகளும் இருந்தாலும், ஒரே குரலில் பேசுகிறோம். தோசை முதல் ஆலு பிரந்தா வரையிலும், ஸ்ரீகண்ட் முதல் சந்தேஷ் வரையிலும், ஒவ்வொரு நூறு மைல்களுக்கும், எங்கள் உணவு வகைகள் மாறுகின்றன. இவை அனைத்தையும் நாம் ரசிக்கிறோம். உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் இந்தியா இல்லமாக உள்ளது. அவை அனைத்தையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது இயற்கையான வாழ்க்கை முறையாகும்.

இன்று, உலகம் இந்தியாவைப் பற்றி மேலும் மேலும் அறிய விரும்புகிறது. அந்த ஆர்வத்தை இந்த அவையிலும் காண்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவில் வரவேற்பதில் நாங்கள் பெருமையடைந்துள்ளோம். இந்தியாவின் வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை அனைவரும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்தியா எதையும் சரியாக செய்கிறது, எப்படி செய்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் மத்தியில், இதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பிரதமராக நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது, இந்தியா உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று, இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மேலும், இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். நாங்கள் பெரிதாக வளர்வதுடன் மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வருகிறோம். இந்தியா வளரும்போது உலகமே வளர்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலக மக்கள் தொகையில் நாங்கள் ஆறில் ஒரு பங்காக இருக்கிறோம்.

கடந்த நூற்றாண்டில், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காலனித்துவ ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்தது. இந்த நூற்றாண்டில், இந்தியா வளர்ச்சியில் அளவுகோல்களை நிர்ணயிக்கும்போது, அது பல நாடுகளையும் அதைச் செய்ய ஊக்குவிக்கும். எமது நோக்கு சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ். இதன் பொருள்: அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதாகும்.

இந்தப் பார்வை எப்படி வேகத்துடனும் அளவிலும் செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நூற்று ஐம்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக கிட்டத்தட்ட நாற்பது மில்லியன் வீடுகளை வழங்கியுள்ளோம். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட ஆறு மடங்கு அதிகம்! சுமார் 500 மில்லியன் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் ஒரு தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். இது தென் அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகம்! உலகின் மிகப் பெரிய நிதிச் சேர்ப்பு இயக்கத்தின் மூலம் வங்கிச் சேவையை வங்கிச் சேவை இல்லாத இடங்களுக்கு கொண்டு சென்றோம். கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் பயனடைந்தனர். இது வட அமெரிக்காவின் மக்கள்தொகை அளவு கொண்டதாகும்.

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்று, இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் உள்ளதுடன், அந்தளவுக்கு இணைய பயனாளர்களும் உள்ளனர். இது ஐரோப்பாவின் மக்கள்தொகையை விட அதிகம்! இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் மூலம் 2.2 பில்லியன் டோஸ்கள் வழங்கி எங்கள் மக்களைப் பாதுகாத்தோம், அதுவும் இலவசமாக! இதனை நான் விவரித்தால், விரிந்து கொண்டே செல்லும். எனவே நான் இங்கே நிறுத்துகிறேன்!

வேதங்கள் உலகின் பழமையான நூல்களில் ஒன்றாகும். அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட மனிதகுலத்தின் மிகப்பெரிய பொக்கிஷமாகும். அக்காலத்தில் பெண் முனிவர்கள் வேதங்களில் பல ஸ்லோகங்களை இயற்றினர். இன்று, நவீன இந்தியாவில், பெண்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்துகிறார்கள். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை பெண்களுக்கு நன்மை பயக்கும் வளர்ச்சி மட்டுமல்ல. இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியாகும், அங்கு பெண்கள் முன்னேற்றத்தின் பயணத்தை வழிநடத்துகிறார்கள். ஒரு எளிய பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் எங்களது குடியரசுத் தலைவராக உயர்ந்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஏறக்குறைய 1.5 மில்லியன் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பல்வேறு மட்டங்களில் இந்தியாவை வழிநடத்துகிறார்கள். இன்று ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பெண்கள் சேவையாற்றி வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில்தான் அதிக பெண் விமானிகள் உள்ளனர். மேலும், செவ்வாய் கிரக மிஷனையும் பெண்களே வழிநடத்துகின்றனர். ஒரு பெண் குழந்தைக்காக முதலீடு செய்வது முழு குடும்பத்தையும் உயர்த்தும் என்று நான் நம்புகிறேன். பெண்களுக்கு அதிகாரமளித்தல், நாட்டை மாற்றுகிறது.

இந்தியா இளைஞர்களைக் கொண்ட பண்டைய நாடு. இந்தியா அதன் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. இளைய தலைமுறையினரும் இந்தியாவை தொழில்நுட்பத்தின் மையமாக மாற்றி வருகின்றனர். பல்வேறு தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சமூகம் எவ்வாறு சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இந்திய இளைஞர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். இந்தியாவில், தொழில்நுட்பம் என்பது கண்டுபிடிப்பு மட்டுமல்ல, உள்ளடக்கம் பற்றியதாகும். இன்று, டிஜிட்டல் தளங்கள் மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் வலுப்படுத்துகின்றன, அதே நேரத்தில் தனியுரிமையைப் பாதுகாக்கின்றன.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் போன்களுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான டிஜிட்டல் பயோமெட்ரிக் அடையாளத்தைப் பெற்றுள்ளனர். இந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு நிதி உதவியுடன் குடிமக்களை நொடிகளில் அடைய உதவுகிறது. 850 மில்லியன் மக்கள் தங்கள் கணக்குகளில் நேரடி நிதி பரிமாற்றங்களைப் பெறுகிறார்கள்.

ஆண்டுக்கு மூன்று முறை, நூறு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உதவிகளைப் பெறுகிறார்கள். இத்தகைய பரிமாற்றங்களின் மதிப்பு முன்னூற்று இருபது பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது, மேலும் இந்த செயல்முறையில் நாங்கள் இருபத்தைந்து பில்லியன் டாலர்களுக்கு மேல் சேமித்துள்ளோம். நீங்கள் இந்தியாவுக்குச் சென்றால், தெருவோர வியாபாரிகள் உட்பட அனைவரும் பணம் செலுத்த தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் காண்பீர்கள்.

கடந்த ஆண்டு, உலகில் ஒவ்வொரு 100 நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், 46 இந்தியாவில் நடந்தன. கிட்டத்தட்ட நான்கு லட்சம் மைல் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், குறைந்த கட்டண தரவு வாய்ப்புகளின் புரட்சிக்கு வழிவகுத்துள்ளன. விவசாயிகள் வானிலை முன்னறிவிப்புகளை சரிபார்க்கிறார்கள், வயதானவர்களுக்கு சமூக பாதுகாப்பு பரிவர்த்தனைகள் கிடைக்கின்றன, மாணவர்கள் உதவித்தொகை பெறுகிறார்கள், மருத்துவர்கள் தொலை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்கள், மீனவர்கள் மீன்பிடி தளங்களை சரிபார்க்கிறார்கள், சிறு வணிகர்கள் அவர்களின் தொலைபேசியை தட்டியவுடன் கடன் பெறுகிறார்கள்.

ஜனநாயக உணர்வு, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை நம்மை வரையறுக்கின்றன. உலகிற்கான நமது தோற்றத்தையும் இது வடிவமைக்கிறது. நமது பூமி பற்றிய பொறுப்புணர்ச்சியுடன் இந்தியா முன்னேறுகிறது.

“பூமிதான் நமது அன்னை, நாம் அனைவரும் அவரது குழந்தைகள்.” என்று நாங்கள் நம்புகிறோம். சுற்றுச்சூழலுக்கும், நமது பூமிக்கும், இந்திய கலாச்சாரம் ஆழ்ந்த மதிப்பளிக்கிறது. வேகமாக முன்னேறும் பொருளாதாரமாக மாறிய அதே வேளையில், எங்களது சூரிய ஒளிசக்தி திறனை 2, 300% அதிகரித்தோம்.

பாரிஸ் உறுதிபாட்டை நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு என்ற பெருமையை நாங்கள் பெற்றோம். நிர்ணயிக்கப்பட்ட 2030-ஆம் ஆண்டுக்கு 9 வருடங்கள் முன்னதாகவே, எங்களது எரிசக்தி ஆதாரங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை 40 சதவீதமாக மாற்றினோம் . எனினும் நாங்கள் இத்துடன் நிறுத்தவில்லை. கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் லைஃப் என்ற சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தை நான் முன்மொழிந்தேன். நிலைத்தன்மையை உண்மையான மக்கள் இயக்கமாக மாற்றும் வழி, இது. அரசுகளின் பணியாக மட்டுமே கருதப்படக்கூடாது.

கவனமாக தேர்ந்தெடுப்பதன் வாயிலாக ஒவ்வொரு தனிநபரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். நிலைத்தன்மையை மக்கள் இயக்கமாக மாற்றுவது, நிகர பூஜ்ஜியம் இலக்கை வேகமாக அடைய உலக நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும். பூமிக்கு உகந்த வளர்ச்சி என்பது எங்களது தொலைநோக்குப் பார்வை. பூமி சார்ந்த வளம் என்பது எங்களது தொலைநோக்குப் பார்வை. பூமியுடன் இணைந்த மக்கள் என்பது எங்களது தொலைநோக்குப் பார்வை.

வசுதைவ குடும்பகம், அதாவது, உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாங்கள் வாழ்கிறோம். உலகத்துடனான நமது செயல்பாடு அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும். “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு” என்ற திட்டம் தூய்மையான எரிசக்தியுடன் நம் அனைவரையும் இணைக்கிறது. “ஒரு பூமி, ஒரே சுகாதாரம்” என்பது விலங்குகள், தாவரங்கள் உட்பட அனைவருக்கும் தரமான சுகாதாரம் கிடைப்பதற்கு ஏற்ற உலகளாவிய செயலாக்கத்திற்கான தொலைநோக்குப் பார்வை.

ஜி20 அமைப்பிற்கு நாங்கள் தலைமையேற்கும் போதும் “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற அதே உணர்வுடன் அதன் கருப்பொருள் அமைந்துள்ளது. யோகாவின் வாயிலாகவும் ஒற்றுமை உணர்வை நாங்கள் மேம்படுத்துகிறோம். சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதற்காக ஒட்டுமொத்த உலகமும் நேற்று ஒன்று திரண்டது. அமைதிப் படையினரை கௌரவிப்பதற்காக நினைவு சுவர் எழுப்ப வேண்டும் என்று ஐ.நாவில் கடந்த வாரம் நாங்கள் முன்மொழிந்ததற்கு அனைத்து நாடுகளும் ஆதரவளித்தன.

மேலும் நிலையான வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்தை ஊக்குவிப்பதற்காக சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை ஒட்டுமொத்த உலகமும் இந்த வருடம் கொண்டாடி வருகிறது. கோவிட் காலத்தின் போது சுமார் 150 நாடுகளுக்கு நாங்கள் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் விநியோகித்தோம். நெருக்கடியின் போது எங்களைப் போலவே பிறரையும் எண்ணி அவர்களுக்கு உதவி வருகிறோம். அதிகம் தேவைப்படுபவர்களுடன் எங்களது வளங்களை பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் திறன்களைக் கட்டமைக்கிறோம், சார்புநிலைகளை அல்ல.

உலகத்தை நோக்கிய இந்தியாவின் அணுகுமுறை பற்றி நான் பேசுகையில் அமெரிக்காவிற்கு இதில் ஒரு சிறப்பு இடம் உண்டு. நமது உறவு உங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது என்பதை நான் அறிவேன். இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அதில் ஆழ்ந்த விருப்பம் உள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை வளர்ச்சி பெறும் போது, வாஷிங்டன், அரிசோனா, ஜார்ஜியா, அலபாமா, தெற்கு கரோலினா மற்றும் பென்சில்வேனியாவில் உள்ள தொழில்துறைகள் ஆதாயம் பெறுகின்றன.

அமெரிக்க நிறுவனங்கள் முன்னேறும் போது, இந்தியாவில் உள்ள அவற்றின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் பயனடைகின்றன. அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் விமானத்தில் பயணிக்கும் போது, விமானங்களுக்கான ஒரு ஆர்டர் அமெரிக்காவின் 44 மாநிலங்களில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த தொலைபேசி நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும் போது, இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு சூழல் உருவாகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து குறைக்கடத்திகள் மற்றும் முக்கிய தாதுக்கள் சம்பந்தமாக பணியாற்றும்போது, மேலும் பன்முகத்தன்மை வாய்ந்த, நெகிழ்தன்மையுடன் கூடிய மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோக சங்கிலியை உலகம் உருவாக்க அது உதவிகரமாக உள்ளது.

நூற்றாண்டின் திருப்பத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறையில் நமது இரு நாடுகளும் அன்னியர்களாக இருந்தன. இன்று எங்களது மிக முக்கியமான பாதுகாப்புத்துறை கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. விண்வெளி மற்றும் கடல்சார் துறைகளிலும், அறிவியல் மற்றும் குறைகடத்திகளிலும், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிலைத்தன்மையிலும், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்திலும், வேளாண்மை மற்றும் நிதியிலும், கலை மற்றும் செயற்கை நுண்ணறிவிலும், எரிசக்தி மற்றும் கல்வியிலும், சுகாதாரம் மற்றும் மனிதாபிமான முயற்சிகளிலும் இன்று இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகின்றன.

இன்னும் கூறிக் கொண்டே இருக்கலாம். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக நான் சொல்ல விரும்புவது, நமது ஒத்துழைப்பின் வாய்ப்புக்கு எல்லையே இல்லை. நமது ஒருங்கிணைப்பின் திறனுக்கு வரையறை இல்லை, நமது உறவில் உள்ள நெருக்கம் சமூகமானது.

இவை அனைத்திலும் இந்திய அமெரிக்க மக்கள் மிகப்பெரியப் பங்கு வகித்துள்ளனர். ஸ்பெல்லிங் பீ-இல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அவர்கள் புத்திசாலிகளாக விளங்குகிறார்கள். தங்களது மனதாலும், இதயத்தாலும், திறன்களாலும், திறமைகளாலும், இந்தியா மற்றும் அமெரிக்கா மீதான அவர்களது அன்பால் நம்மை அவர்கள் இணைக்கிறார்கள்; அவர்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்; நமது கூட்டுமுயற்சியின் திறனை அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

கடந்த காலத்தில் ஒவ்வொரு இந்தியப் பிரதமரும், அமெரிக்க அதிபரும் நமது உறவை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை நமது தலைமுறையையே சாரும். இந்த நூற்றாண்டின் வரையறுக்கப்பட்ட கூட்டணி, இது என்ற அதிபர் பைடனின் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் மிகப்பெரிய நோக்கத்திற்கு இது உதவுகிறது. ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் எதிர்காலம் ஆகியவை அந்த நோக்கத்தை தருகின்றன. உலகமயமாக்கலின் விளைவு, விநியோகச் சங்கிலியின் அதிகப்படியான ஒருங்கிணைப்பாகும்.

விநியோக சங்கிலிகளை பன்முகப்படுத்தவும், பரவலாக்கவும், ஜனநாயகமாக்கவும் நாம் இணைந்து பணியாற்றுவோம். 21-வது நூற்றாண்டில் பாதுகாப்பு, வளம் மற்றும் தலைமைத்துவத்தை தொழில்நுட்பம் நிர்ணயிக்கும். அதனால்தான் நமது இரு நாடுகளும் “முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி” என்ற புதிய திட்டத்தை உருவாக்கினோம். நமது அறிவுசார் கூட்டணி, மனித சமூகத்திற்கு சேவையாற்றுவதோடு, பருவநிலை மாற்றம், பசி மற்றும் சுகாதாரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகளையும் கண்டறியும்.

கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியில் மோசமான சீர்குலைவு காணப்படுகிறது. உக்ரைன் பிரச்சனையால் ஐரோப்பாவில் மீண்டும் போர் தொடங்கியுள்ளது. பிராந்தியத்தில் பெரும் கவலையை இது உருவாக்குகிறது. மிகப்பெரிய சக்திகளை இது உள்ளடக்கியிருப்பதால் இதன் விளைவுகளும் மோசமாக உள்ளது. குறிப்பாக உலகளாவிய தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.நா சபையின் கொள்கைகளை மதித்தல், பூசல்கள் குறித்த அமைதியான உறுதிப்பாடு, இறையாண்மையை மதித்தல் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய வரிசை அமைந்துள்ளது.

நேரடியாகவும் பொதுவெளியிலும் நான் தெரிவித்தது போல, இந்த யுகம், போருக்கானது அல்ல. மாறாக, பேச்சுவார்த்தை மற்றும் தூதராக நிலை சம்பந்தமானது. மனித உயிர்கள் சேதமடைவதைத் தடுப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இந்தோ- பசிபிக் பகுதியில் வற்புறுத்தல் மற்றும் மோதலின் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தப் பகுதியின் நிலைத்தன்மை, நமது கூட்டுமுயற்சியின் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

ஆசியானை மையமாகக் கொண்டு, ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சர்வதேச சட்டங்களால் வரையறுக்கப்பட்ட, பாதுகாப்பான கடல் பகுதிகளால் இணைக்கப்பட்ட, தடையற்ற, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ- பசிபிக் பகுதி குறித்த தொலைநோக்குப் பார்வையை நாங்கள் கொண்டிருக்கிறோம். சிறிய மற்றும் பெரிய நாடுகள் தங்களது தேவைகளை தேர்வு செய்வதில் இடையூறு மற்றும் அச்சமில்லாமல் இருப்பதற்கு ஏதுவான, கடன் சுமைகளால் நசுக்கப்படாத முன்னேற்றம் கொண்ட, கேந்திர நோக்கங்களுக்காக இணைப்புகள் பயன்படுத்தப்படாத, பகிர்ந்தளிக்கும் வளத்தினால் அனைத்து நாடுகளும் முன்னேறும் வகையிலான ஒரு பகுதி.

கட்டுப்படுத்துவதோ, விலக்குவதோ எங்கள் எண்ணமல்ல, மாறாக அமைதி மற்றும் வளம் கொண்ட ஒருங்கிணைந்த மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் . பிராந்திய நிறுவனங்களின் வாயிலாகவும், மண்டலத்தின் உள்ளே மற்றும் வெளியே உள்ள எங்களது கூட்டாளிகளுடனும் நாங்கள் பணியாற்றுகிறோம். இவற்றுள், பிராந்தியத்தின் நலனுக்கான மிகப்பெரிய உந்துசக்தியாக குவாட் வளர்ச்சி பெற்று உள்ளது.

9/11 சம்பவம் நடைபெற்று இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும், மும்பையின் 26/11 நிகழ்வு நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் இன்னும் விளங்குகிறது. இந்த கோட்பாடுகள் புதிய அடையாளங்களையும், வடிவங்களையும் எடுத்து வந்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்றே. மனித சமூகத்தின் மிகப்பெரிய எதிரி, தீவிரவாதம். இதை எதிர்கொள்வதில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.

மனித இழப்புகள் மற்றும் அது ஏற்படுத்திய கவலைகள் தான் கோவிட்-19-இன் மிகப்பெரிய தாக்கமாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரான் ரைட் மற்றும் அதிகாரிகளை நினைவுகூர்கிறேன். பெருந்தொற்றில் இருந்து நாம் வெளிவரும் வேளையில், புதிய உலக வரிசையை வடிவமைக்க வேண்டும். இரக்கம், அன்பு மற்றும் அக்கறை ஆகியவைதான் தற்போதைய காலத்தின் கட்டாயம். உலகளாவிய தெற்கு பகுதிக்கு குரல் கொடுக்க வேண்டும். அதனால் தான் ஒன்றிய ஆப்பிரிக்காவிற்கு ஜி20 அமைப்பின் முழுமையான உறுப்பினர் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நாம் பன்முகத்தன்மையைப் புதுப்பிக்க வேண்டும், மேம்பட்ட வளங்கள் மற்றும் பிரதிநிதித்துவத்துடன் பலதரப்பட்ட நிறுவனங்களை சீர்திருத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் உட்பட நமது அனைத்து உலகளாவிய ஆளுகை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். உலகம் மாறும் போது நமது நிறுவனங்களும் மாற வேண்டும். இல்லையென்றால் ஆணைகளுக்கு கட்டுப்படாத எதிரிகளின் உலகத்தால் மாற்றி அமைக்கப்பட வேண்டி இருக்கும். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் புதிய உலக வரிசையை உருவாக்குவதில், நமது இரண்டு நாடுகளின் கூட்டணி முன்னிலை வகிக்கும்.

நம் இரு நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது மட்டுமல்லாமல், உலகையே வடிவமைக்கும் நமது உறவின் புதிய தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். ‘அச்சமில்லாமல் நிழலை விட்டு விலகி நாம் வெளிவரும் போது தான் புதிய விடியல் பிறக்கிறது. வெளிச்சம் எப்போதுமே இருக்கிறது, ஆனால் தைரியமாக வெளிவந்தால் மட்டுமே அதைக் காண முடியும்’, என்று இளம் அமெரிக்க கவிஞர் அமாண்டா கோர்மான் கூறியதைப் போல நமது நம்பிக்கையான கூட்டணி, எங்கும் வெளிச்சத்தை பரப்பும் இந்த புதிய விடியலின் சூரியனைப் போன்றதாகும்.

‘ஆகாயத்தில் தலையை உயர்த்தி,

அடர்ந்த மேகங்களைத் துளைத்து,

ஒளியின் வாக்குறுதியுடன்,

சூரியன் தற்போது உதயமாகிவிட்டது.

ஆழ்ந்த உறுதியை ஏந்தி,

அனைத்து தடைகளையும் கடந்து,

இருளின் ஆதிக்கத்தை ஒழிக்க,

சூரியன் உதயமாகிவிட்டது’

என்று நான் ஒரு முறை எழுதிய கவிதையை நினைவுகூர்கிறேன்.

வெவ்வேறு சூழல்கள் மற்றும் வரலாற்றில் இருந்து நாம் வந்துள்ள போதும், பொதுவான இலக்கும் எதிர்காலமும் நம்மை இணைக்கின்றன. நமது கூட்டணி முன்னேறும் போது, பொருளாதார நெகிழ்தன்மை அதிகரிக்கும் போது, புத்தாக்கம் வளரும்போது, அறிவியல் விரிவடையும்போது, அறிவு பெருகும் போது, மனித சமூகம் பயனடையும்போது, நமது கடல்களும் ஆகாயமும் பாதுகாப்பாக இருக்கும் போது ஜனநாயகம் மேலும் ஒளிமயமாகும், இன்னும் சிறந்த இடமாக உலகம் மேம்படும்.

அதுதான் நமது கூட்டுமுயற்சியின் நோக்கம். இந்த நூற்றாண்டில் அதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம். திரு அவைத்தலைவர் மற்றும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, நமது கூட்டுமுயற்சியின் உயர்ந்த நிலையாலும் இந்தப் பயணம் மிகப்பெரிய நேர்மறையான மாற்றமாக உள்ளது. ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் செயல்பாடுகளையும் நாம் ஒன்றிணைந்து விளக்குவோம். இந்திய- அமெரிக்க கூட்டுமுயற்சிக்கு உங்களது தொடர் ஆதரவை நாடுகிறேன்.

கடந்த 2016-ம் ஆண்டு நான் இங்கு வந்திருந்த போது “நமது உறவு ஒரு உத்வேகமான எதிர்காலத்திற்கு முக்கியமானது” என்று கூறியிருந்தேன். அந்த எதிர்காலம் இதுதான். அமெரிக்காவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும். ஜெய்ஹிந்த். இந்திய- அமெரிக்க நட்புறவு நீடூழி வாழட்டும்." இவ்வாறு பிரதமர் மோடியின் உரை இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்