பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் - ஒபாமா

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது,

“இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் ஒருவேளை நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியாவில் பிளவு ஏற்படுவதற்காக வாய்ப்பு வலுவாக உள்ளது என்று கூறுவேன். அதுவே எனது உரையாடலின் பகுதியாக இருக்கும்.

இல்லாவிட்டால், அதிபர் பைடனாவது பிரதமர் மோடியை சந்திக்கும்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது குறித்து பேச வேண்டும் . ஆனால் உண்மையாகவே நமது நட்பு நாடுகளுடன் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது கடினமானதுதான்” என்றார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பின்னர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றர், அப்போது, அவரிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மோடி பதிலளிக்கும்போது, “ சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE