சந்தன பெட்டியை அதிபர் பைடனுக்கு பரிசளித்த பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற பிரதமர் மோடி-அதிபர் பைடன் சந்திப்பின்போது இரு வரும் பல்வேறு பரிசுப் பொருட்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த காஷ்மீர் பெட்டகத்தில் வைத்து 7.5 காரட் வைரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

காற்றாலை, சூரிய ஒளி போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த வைரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு காரட்டுக்கு 0.028 கிராம் கார்பனை மட்டுமே வெளியிடக்கூடியது. மேலும் இந்த வைரத்துக்கு ஜெமோலஜிக்கல் லேப், சர்வதேச ரத்தினவியல் நிறுவனம் (ஐஜிஐ) ஆகியவை சான்றளித்துள்ளன.

தமிழகத்தின் வெள்ளை எள்: கர்நாடகா மைசூருவின் நறுமண சந்தன மரத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கைவினை கலைஞர் உருவாக்கிய சந்தனப் பெட்டியை பிரதமர் மோடி அதிபர் பைடனுக்கு பரிசளித்தார். அதில், விநாயகர் உருவம் பொறித்த சிலை, விளக்கு, தாமிர தட்டுடன் 10 சிறிய வெள்ளி குடுவைகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, தமிழகத்தின் வெள்ளை எள் பைடன் பரிசில் முக்கிய இடம்பிடித்தது.

இவைதவிர, சிறிய வெள்ளி குடுவைகளில் ராஜஸ்தான் கைவினை கலைஞர் உருவாக்கிய 24 காரட் ஹால் மார்க் தங்க காசு, பஞ்சாபின் நெய், ஜார்கண்டின் கையால் நெய்யப்பட்ட பட்டுத் துணி, உத்தராகண்டின் நீளமான பாசுமதி அரிசி, மகாராஷ்டிரா வெல்லம், ராஜஸ்தான் கைவினைஞர் களால் செய்யப்பட்ட 99.5 சதவீதம் தூய்மையான ஹால்மார்க் வெள்ளி நாணயம், குஜராத்தின் உப்பு ஆகியவை சந்தன பரிசு பெட்டகத்தில் இடம்பெற்றிருந்தன.

“தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்" புத்தகமும் பைடனுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

அதேபோன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடிக்கு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையால் செய்யப்பட்ட பழமையான அமெரிக்க புத்தக பிரதி, கேமரா, முகநூல் அச்சு, அமெரிக்க வன விலங்கு புகைப்படம் எடுத்தல் பற்றிய ஹாட்கவர் புத்தகம், ராபர்ட் ப்ரோஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் கையொப்பமிட்ட முதல் பதிப்பு நகலையும் பரிசளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் விளைவிக்கப்படும் பாசுமரி அரிசி உலகளவில் பிரசித்தி பெற்றது. நீளமான வடிவம், தனித்துவமான வாசனை காரணமாக அந்த அரிசிக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. உள்ளூர் விவசாயிகளால் இயற்கை முறையில் இந்த அரிசி விளைவிக்கப்படுகிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பாசுமதி அரிசியை அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். இதற்காக, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடிக்கு நேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE