நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பல் சிதைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1,600 அடி (487 மீ) தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஆடம் ஜான் தெரிவித்தது. டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் நீரில் மூழ்கக்கூடியவை என்று நம்பப்படுகிறது. கடலில் டைட்டன் வெடிப்பதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், அமெரிக்க கடற்படை கடலுக்குள் ஏதோ வெடிப்பு ஏற்பட்ட சத்தத்தை கேட்டது.
அந்த சத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் தனது பயணத்தை தொடங்கிய சில மணி நேரத்தில் மேற்பரப்புடன் இருந்த தகவல் தொடர்பு துண்டானதும் கேட்டதாக நம்புகிறோம். டைட்டனின் பாகங்களை ரிமோட் மூலம் நீருக்குள் இயங்கும் மீட்பு இயந்திரம் கண்டறிந்தது. அதனை அதிகாரிகள் உறுதி செய்தனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த ஐந்து பேரும் மெய்யான சாகச விரும்பிகள் என ஓசன்கேட் நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சோகத்தில் முடிந்த சாகச சுற்றுலா: கனடா அருகே அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி சிதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம், நீர்மூழ்கியில் செல்லும் சாகச சுற்றுலாவை நடத்துகிறது.
இந்நிறுவனத்தின் முக்கியப் பணி ஆழ்கடல் ஆராய்ச்சிதான். அதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, இதுபோன்ற சாகச சுற்றுலாவை நடத்துகிறது. இந்நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் 46 பேர் வெற்றிகரமாக பயணம் செய்து, ஆழ்கடலில் சிதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். இந்தாண்டில் தொடங்கப்பட்ட முதல் பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில் இங்கிலாந்து கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால்-ஹென்றி நர்ஜோலெட், ஓசன்கேட் சாகச பயணத்தை நடத்தும் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பைலட் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணித்தனர். இவர்கள் ஐந்து பேரும் நீர்மூழ்கி வெடித்த காரணத்தால் உயிரிழந்துள்ளனர்.
பத்தரை மணி நேர பயணம்: இந்த டைட்டன் நீர்மூழ்கியில், டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்துக்கு செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். அதேபோல் கடலின் மேற்பகுதிக்கு வரவும் இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால், கடந்த முறை, இந்த சாகச சுற்றுலாவை முடிக்க மொத்தம் பத்தரை மணி நேரம் ஆனதாக இதில் ஏற்கெனவே பயணம் செய்த ஆர்த்தர் லாய்பிள் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘நீர்மூழ்கியின் எடை சமநிலையில் இருக்கும்போது தான் நீர்மூழ்கி மூழ்கத் தொடங்கும். அப்போது பேட்டரியில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். அதை சரி செய்தபின் நீர்மூழ்கி மூழ்கத் தொடங்கியது. நீர்மூழ்கி பயணத்தின் போது, மின்சாரத்தை சேமிக்க விளக்குகள் அணைக்கப்படும். நீர்மூழ்கிக்குள் இருக்கும் புளோரசென்ட் ஒளிரும் பொருட்கள் மூலம் கிடைக்கும் வெளிச்சம் மட்டுமே நீர்மூழ்கியில் இருக்கும்’’ என்றார்.
மீட்பு பணி: டைட்டன் நீர்மூழ்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் தொடங்கிய 1.45 மணி நேரத்தில் நீர்மூழ்கியுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டானது. இதையடுத்து அமெரிக்கா மற்றும் கனடா கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மீட்புப் பணியில் இறங்கினர். ஆழ்கடல் கண்காணிப்பு விமானம் மற்றும் சோனார் கருவிகளில், ஆழ்கடல் பகுதியில் கேட்ட சத்தம் பதிவானது. அதனால் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சத்தம் எந்த இடத்தில் இருந்து வந்தது என்பதை துல்லியமாக கண்டறிய முடியவில்லை. நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டானால், நீர்மூழ்கியின் தரைப்பகுதியை தட்டும்படி, அதில் பயணம் செய்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கேட்கும் சத்தத்தை சோனார் கருவியால் கண்டுபிடிக்க முடியும். அதுபோல் கடந்த 2 நாட்களாக பதிவான சத்தத்தை வைத்தே, தற்போது டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணி நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ் நாட்டின் ரோபோ விக்டர் 6000 ஈடுபடுத்தப்பட்டது.
ஆழ்கடல் பகுதியில் டைட்டன் நீர்மூழ்கி சிக்கியிருப்பது கண்டறியப்பட்டால் அதை மேலே தூக்கி வருவதற்கான ஆழ்கடல் மீட்புக் கருவியை அமெரிக்க கடற்படை நியூஃபவுண்ட்லேண்ட் பகுதிக்கு கொண்டு சென்றது. டைட்டன் நீர்மூழ்கியின் எடை 9,071 கிலோ. அமெரிக்க கடற்படையின் மீட்பு கருவியால் 27 ஆயிரம் கிலோ எடையுள்ள எந்த பொருளையும் ஆழ்கடல் பகுதியில் இருந்து மேலே தூக்கி வர முடியும். டைட்டன் நீர்மூழ்கி சிக்கியிருக்கும் இடம் தெரிந்தால், அதை அமெரிக்க கடற்படையால் மீட்க முடியும். ஆனால், நீர்மூழ்கி வெடித்த காரணத்தால் அது நடைபெறவில்லை.
7 சாதனங்கள்: டைட்டன் நீர்மூழ்கியில் இருக்கும் ஆக்ஸிஜன் 96 மணி நேரத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால், டைட்டன் நீர்மூழ்கியை மீட்கும் முயற்சி நேற்று முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
டைட்டன் நீர்மூழ்கியில் பழுது ஏற்பட்டால், அது கடலின் மேல் பரப்புக்கு வர பலூனை வெளியேற்றும் பைப், மணல் பைகள் உட்பட 7 விதமான சாதனங்கள் நீர்மூழ்கியில் உள்ளன. அப்படியிருந்தும் நீர்மூழ்கி கடலின் மேல்பரப்புக்கு வராமல் ஆழ்கடல் பகுதியில் வெடித்ததாக நம்பப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago