ODI WC Qualifier | போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து இதயங்களை வென்ற ஜிம்பாப்வே ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

ஹராரே: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளது.

அந்த 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வே நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும். இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியும் விளையாடி வருகிறது.

ஜிம்பாப்வே அணி நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளது. அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணியுடன் குரூப் சுற்றில் அந்த அணி சந்திக்க உள்ளது.

வழக்கமாக களத்தில் விளையாட்டு வீரர்கள் தான் தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். இப்படி இருக்கும் சூழலில் தகுதிச் சுற்றுப் போட்டியை நேரில் பார்க்க மைதானத்துக்கு வந்திருந்த ஜிம்பாப்வே நாட்டு ரசிகர்கள், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி அசத்தினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. அதோடு அவர்களது செயலுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் போட்டி முடிந்த பிறகு மைதானத்தை ஜப்பான் ரசிகர்கள் சுத்தம் செய்திருந்தனர். அதை நினைவுப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE