கீவ்: கழுகு கோணத்தில் தெரியும் அந்த செயற்கைகோள் படங்களில் கடலென பரந்து விரிந்து கிடக்கும் ஓர் அணைக்கட்டின் கரையில் ஓர் இடத்தில் உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறுகிறது. துள்ளிக் குதித்து வெளியேறும் தண்ணீர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
தெற்கு உக்ரைனுக்குச் சொந்தமான, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உடைப்பு ராணுவத் தாக்குதல் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் நேட்டோவும் ரஷ்யா மீது குற்றம் சுமத்துகின்றன. ரஷ்யாவோ உக்ரைன் மீது பழிபோடுகிறன்றது. இந்த அரசியல் விளையாட்டுக்கு மத்தியில் அணைப்பகுதியைச் சுற்றியிருக்கும் இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ள பயம் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அணையின் அமைவிடம்: நேவா ககோவ்கா அணை, உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள தி ககோவ்க் நீர்மின்நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு அணைகளில் ஒன்றாகும். சோவியத் ரஷ்யா இணைந்திருக்கும்போது இந்த கட்டப்பட்ட ககோவ்கா அணை நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்கில் இருக்கும் கடல் வரை நீண்டு கிடக்கிறது. மிகப் பெரிய இந்த அணையினை சில இடங்களில் இருந்து பார்க்கும்போது மறு கரையை பார்க்க முடியாது என்பதால் உள்ளூர் மக்கள் ககோவ்கா கடல் என்றே அழைக்கின்றனர்.
நடந்தது என்ன? - பார்க்க கிடைக்கும் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளில் அணையின் ஒரு பகுதி சேதமடைந்து அதன் வழியாக தண்ணீர் கெர்சன் பகுதியை நோக்கி வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. அணை எப்போது சேதமடைந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை.
அணையில் இருந்து வெளியேறும் நீரின் வெள்ளப்பெருக்கு எவ்வளவு இருக்கும் எனத் தெளிவாக தெரியவில்லை. ஆனால், 16,000 மக்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதியை அழிக்கும் அளவிற்கு இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கெர்சனின் அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைனின் நீர்மின் நிலைய டேம் ஆப்ரேட்டர் கூறும் போது, "இந்த நிலையம் மீண்டும் நிர்மானிக்க முடியாதபடி முற்றிலும் அழிந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
எதற்காக இந்தத் தாக்குதல்? - எதற்காக இந்தத் தாக்குதல் நடந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உக்ரைன் தரப்போ ரஷ்யா வேண்டுமென்றே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறுகின்றது. ஆனால், ரஷ்யத் தரப்போ உக்ரைன்தான் தாக்குதல் நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. யார் தாக்குதல் நடத்தியிருந்தாலும் இந்த அணை அதன் பல்வேறு பயன்பாடுகளின் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் பெருகிறது.
பரந்த அளவில் நீர்த் தேக்கி வைத்திருக்கும் இந்த அணையினை ககோவ்காவின் மேல்பகுதியில் இருக்கும் விவாசாயிகள் பெரிதும் நம்பியிருக்கின்றனர். ஒருவேளை நீரின் அளவு குறையும்போது இது விவசாயத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் அணையினை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், இந்த அணையானது மேற்பரப்பில் 100 மைல்கள் தள்ளியிருக்கும் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு குளிர் நீரை வழங்குகிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த அணுமின் நிலையம் இந்த அணையினேயே முழுமையாக நம்பியுள்ளது.
தற்போது அணுமின் நிலையத்திற்கு உடனடியாக எந்த பாதிப்பு இல்லை என்றாலும், நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சர்வதேச அணுமின்நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த அணை டினிப்ரோ நதியில் இருந்து ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியான கிரீமியாவிற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வையைக் கொண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யா கிரீமியாவை ஆக்ரமித்த பின்னர், உக்ரைன் ககோவ்காவில் இருந்து கிரிமியாவிற்கு செல்லும் கால்வாயை அடைத்து அங்கு தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் முழு அளவிலான தாக்குதலுக்கு பின்னர் ககோவ்கா கைப்பற்றிய பின்னர், ரஷ்யா அந்த கால்வாயை மீண்டும் திறந்தது. ஆனால் அணையின் நீர்மட்டம் குறையும்போது அது கிரீமியாவை அதிகம் பாதிக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்து வெள்ளப் பெருக்கு மற்றும் மின் தட்டுப்பாட்டை உண்டாக்க ரஷ்யா பல்வேறு அணைகளில் முன்பு தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையின் மீது யார் தாக்குதல் நடத்தி இருந்தாலும், நியாய தர்மங்களுக்கு கட்டுப்படாமல், பின்விளைவுகளை யோசிக்காமல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதால் ரஷ்யாவும் உக்ரைனும் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என புலம்பும் நிலைக்கு தள்ளப்படலாம்.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago