உக்ரைன் போரில் 500 குழந்தைகளை ரஷ்யா கொன்றது: ஜெலன்ஸ்கி

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், "உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா கொன்றது. ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனின் மீது படை எடுத்தது முதல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களில் பலர் பிரபலமான அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு சாம்பியன்கள்.இந்தப் போரை நாம் எதிர்த்து நின்று வெல்ல வேண்டும்.

உக்ரைனின் முழு பகுதியும், எங்கள் மக்கள் , எங்கள் குழந்தைகள் அனைவரும் ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து விடுபட வேண்டும்" என்றார்.

முன்னதாக உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதே நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கவோம் என்று தலைவர்களும் உறுதியளித்தனர். இந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து உக்ரைனில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE