ஜன - 03: இன்று என்ன? - வீரமங்கை வேலு நாச்சியார்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் அரசி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர் வீரமங்கை வேலு நாச்சியார்.

1730 ஜனவரி 3-ம் தேதி ராமநாதபுரத்தில் பிறந்தார். ஆயுதப் பயிற்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். திண்டுக்கல் கோட்டையில் 8 ஆண்டுகள் முகாமிட்டு வாழ்ந்தார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க ஹைதர் அலியிடம் உதவி கேட்டார். இவர் படை 1780 ஜூன் மாதம் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.

ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும், 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படையினரையும் அனுப்பி வைத்தார். அதை பயன்படுத்திய வேலுநாச்சியார் போர் பயிற்சி பெறாத மக்களின் துணை கொண்டு அந்நியர்களை வெற்றி கொண்டார். அதன் பிறகு வேலு நாச்சியார் சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார். போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 1796 டிசம்பர் 25-ல் இறந்தார்.

ராணி வேலு நாச்சியாருக்கு நினைவு தபால் தலை இந்திய அரசால் 2008-ல் வெளியிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு 2014-ல் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE