இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் கடந்த காதலர் தினத்தைப் ‘பசு தழுவும் தினம்’ என்று நகைப்புக்குரிய முறையில், பிறப்பித்த ஆணையைப் பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டது. பசுவைப் புனிதமாக பூஜிப்பது அவ்வாறு நம்புபவர்களின் உரிமை.
அந்தக் கருத்தை விமர்சனம் செய்வதற்கு உரிமை உள்ளது போலவே வழிபடுவதற்கும் உரிமை உண்டு. ஆயினும் இந்தியக் குடிமக்கள் பசுக்களைத் தழுவ வேண்டும் என்ற ஆணையை அரசு நிறுவனம் ஏன் வெளியிட வேண்டும்? வெளியிட்ட ஆணையை ஏன் திரும்பப் பெற வேண்டும்?
‘துளசிச் செடி ஓசோன் வாயுவை உமிழ் கிறது. எனவே, துளசிச் செடி வளர்த்து புவி வெப்பமடைதலைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்’ என்ற போலிச் செய்தி, சமூக வலைதளங்களின் வழியே உங்களுக்கும் வந்து சேர்ந்திருக்கலாம். துளசிச் செடி உள்பட எந்தவொரு தாவரமும் கணிசமான ஓசோன் வாயுவை உற்பத்தி செய்ய முடியாது.
அது மட்டுமல்ல, பூமியிலிருந்து 15 கி.மீ. உயரத்தில் இருந்தால்தான் சூரியனின் நச்சுப் புறஊதாக்கதிரிலிருந்து ஓசோன் படலம் நமக்குப் பாதுகாப்பு தரும். ஆனால், தரைப் பகுதியில் நாம் சுவாசிக்கும்படியாக ஓசோன் வாயு இருந்தால், அது நமக்கும் விலங்குகளுக்கும் நஞ்சு. இப்படிப்பட்ட போலிச் செய்தியைப் பகிர்வதற்கு முன்னால் ஏன் நாம் சரிபார்ப்பதில்லை?
போலி அறிவியல்: இணை சேராமல், ஆண் மயிலின் கண்ணீரைக் குடித்து பெண் மயில் கர்ப்பம் தரிக்கும் என ஒரு நீதியரசர் கூறினார். பசு மட்டுமே காற்றைச் சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடும் ஒரே விலங்கு என ஒரு மாநிலத்தின் முதல்வர் கூறினார். குரங்கு மனிதனாக மாறுவதை நாம் எங்கே கண்டிருக்கிறோம், எனவே பரிணாமத் தத்துவம் தவறு என்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.
உலகெங்கும் நடந்துள்ள அகழ்வாராய்ச்சிகளில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சுட்ட மண் பாத்திரங்கள் போன்ற பொருள்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஆனாலும் அந்தக் காலத்தில் புஷ்பக விமானம் இருந்தது, வேற்று கிரகங்களுக்குச் சர்வசாதாரணமாகச் சென்றுவந்தனர் என்று சொன்னால் நம்புகிறோம்.
அசட்டுக் கருத்துகளின் உறைவிடம் என நாம் ஒதுக்கித்தள்ளும் சமூக வலைதளப் பதிவுகள் முதல், உயர் பதவிகளில் செல்வாக்குக் கொண்ட பலரும் அபத்தமாகக் கருத்துரைப்பது ஏன்? ஆதிசங்கரரோ ராமானுஜரோ, ஏன் விவேகானந்தர்கூட இயற்கை அறிவியலையும் மதத்தத்துவத்தையும் கலக்கவில்லை.
‘வேதியியல் கற்க அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இயற்கைதான். மதத்தைக் கற்றுக் கொள்வதற்கான புத்தகம் உங்கள் சொந்த மனம்தான்’ என்கிறார் விவேகானந்தர். அதாவது, அறிவியலைக் கற்க இயற்கை எனும் புத்தகத்தில் தேடு; வேத இதிகாசங்களில் தேடாதே என்கிறார் அவர். எனினும் இன்று பலரும் தாம் புனிதம் என்று கருதும் கருத்துகளுக்கு, போலி அறிவியல் முலாம் பூசித் திருப்தி அடைகிறார்கள்.
ஏன் கவலைகொள்ள வேண்டும்? - ஒருவர் பாம்பு பால் குடிக்கும் எனத் தவறாகக் கருதி நம்பிக்கை கொள்வதால் நமக்கென்ன? நாம் ஏன் மற்றவர்களின் நம் பிக்கைகளில் தலையிட வேண்டும்? கூகுள்மேப்பை திறந்து பார்த்தால், திருநள்ளாறுகோயிலின் மேலிருந்து விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
என்றாலும் நாசாவே அதைப் படம் எடுக்க முடியவில்லை என்பது போன்ற போலிச் செய்திகள் பரவல், எது உண்மையான செய்தி, எது போலிச் செய்தி எனப் பகுத்து அறிவதைச் சிக்கலாக்கி, சமூக அரசியல் விவகாரங்களில் குழப்பத்தையும் தவறான புரிதலையும் உருவாக்கும். இது ஜனநாயகத்துக்கு ஆபத்து.
புகைபிடிப்பது உடல்நலக் கேடு எனநாம் அறிவோம். ஆயினும் சிலர் புகைபிடித்தால், உடல்நலக் கேடு என அறிவுறுத்துகிறோம். அதனைக் குற்றச் செயலாக வரையறை செய்வது இல்லை. ஏனெனில், அது தனிநபர் விருப்பம். ஆயினும் மற்றவர்களின் மூச்சுடன் அவர்கள் விருப்பம் இல்லாமலே கலந்துவிடுகிறது என்பதால், பொதுவெளியில் புகைப்பதை ஒழுங்குபடுத்துகிறோம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் வயிறு நன்றாக இருப்பதாகச் சிலர் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை மற்றவர்கள் மேல் திணிக்காத வரை, இதனால் சமூகத்துக்கு பாதிப்பு ஏதுமில்லை. ஆனால், மற்றவர்களுக்கு நேரடியாகத் தீங்கு விளைவிக்கக்கூடிய போலிச் செய்திகளைக் கண்டும் காணாமல் இருப்பது பெரும் சமூகத் தீங்கு.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிள்ளையாரின் யானை முகம் எடுத்துக்காட்டு, அந்தக் காலத்தில் புஷ்பக விமானம் இருந்தது என்பது போன்ற கருத்துகளின் தொடர்ச்சிதான் கரோனா காலத்தில் தடுப்பூசிகளுக்கு எழுந்த எதிர்ப்பும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளும்.
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வது அவசியம். மருத்துவம் வணிகமயமாகிவிட்ட நிலையில் அறிவியலுக்குப் புறம்பாக, தேவையற்ற மருத்துவச் சிகிச்சை மூலம் தனியார் மருத்துவமனைகள் பணம் பிடுங்குவதாகக் கருதுகிறோம்.
இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், நவீன மருத்துவமே போலி என ஒதுக்கிக்தள்ளும் போக்கையும் காண்கிறோம். இது தவறான பார்வை. மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பது தனி மனிதரின் நம்பிக்கைகளைத் தடைசெய்யும் போக்கு அல்ல. அந்தத் தனிமனித நம்பிக் கைகளைப் பொதுவெளியில் பரப்பி, மற்றவர் களுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது எனும் பார்வையே அறிவியல் மனப்பான்மை.
வானியற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் மேகநாட் சாஹா தனது கண்டுபிடிப்பை ஆசையாக விளக்கிக் கூறியபோது, கூட்டத்தில் ஒருவர், ‘இதுதான் வேதத்தில் இருக்கிறதே’ எனக் கூறிக் கொண்டிருந்தார். எல்லா அறிவியல் முன்னேற்றங்களையும் பண்டைய ரிஷி முனிகள் கண்டுபிடித்துவிட்டனர். எந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் புதுமை இல்லை என்பது அறிவியலுக்கு எதிரானது. புதுமை காண விழையும் இளைஞர்களின் செயலூக்கத்தைக் கெடுப்பது.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு உலக அறிவியல் மொழியாக ஜெர்மன் திகழ்ந்தது. ஐன்ஸ்டைன், மாக்ஸ் ப்ளாங்க் போன்ற முக்கிய அறிவியலாளர்கள் எல்லாம் ஜெர்மன்மொழியில்தான் கட்டுரைகளை எழுதினார்கள். எனவே, ஆய்வில் ஏற்படும் வளர்ச்சியைஉடனுக்குடன் அறிந்துகொள்ளும் நோக்கில்எஸ்.என்.போஸ், மேகநாட் சாஹா போன்றமுதல் தலைமுறை இந்திய விஞ்ஞானிகள் ஜெர்மன் கற்றுக்கொண்டு, உலகம் வியக்கும் அறிவியலைப் படைத்தனர்.
அறிவு, திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என நிரூபித்தனர். இவர்கள் அமைத்த அடித்தளத்தில் தான் இன்றைய இந்திய அறிவியல் நிலைகொண்டிருக்கிறது. மாறாக போலி அறிவியல் செய்திகளை நம்புவதும் பரப்புவதும் இந்திய அறிவியலை பின்னோக்கியே இழுக்கும்.
- கட்டுரையாளர் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago