இந்திய அறிவியல் நாள் | மக்களுக்கான அறிவியல்!

By இ. ஹேமபிரபா

அறிவியல் என்றால் நவீன தொழில்நுட்பங்கள்தாமா? அன்றாட வாழ்வில் சமையலறை தொடங்கி, காலணிகளின் வடிவமைப்பு வரை அனைத்திலும் அறிவியல் நுழைந்திருக்கிறதுதானே? சிக்கல் என்னவென்றால், பள்ளிப் படிப்புக்குப் பின் ‘அறிவியல்’ என்ற சொல்லைப் பலரும் மறந்துவிடுகிறோம்.

அதனால் என்ன பிரச்சினை, அறிவியலை ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் இந்தப் போக்கு, ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பல்வேறு விதங்களில் பாதிக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அறிவியல் இருக்கிறது. இதை உணரும்போது, நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கும் அறிவியல்ரீதியாக முடிவுகளைக் கொண்டுவர முடியுமா என்று தன்னிச்சையாகவே சிந்திக்கத் தொடங்குவோம்.

சூழல்–1: புகைக்கூண்டின் உயரமும் புதைந்துபோன அறிவியலும்

தமிழ்நாட்டு சிப்காட்டில் தொழிற்சாலை அமைத்துள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் புகைக்கூண்டு வழியாகக் கழிவு வெளியேறி, அருகிலிருந்த மற்றொரு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது படிந்தது. சாதாரண புகை போலில்லாமல் இக்கழிவு கண்ணாடித் துகள்கள் போன்று இருந்ததால், பொருள்களின் மேற்புற வண்ணப்பூச்சுகள் சேதமடைந்தன.

இதனால் இரண்டு நிறுவனங்களுக்கும் பிணக்கு ஏற்பட்டது. நிலைமையைச் சீராக்க, புகைக் கூண்டின் உயரத்தை அந்த நிறுவனம் அதிகப்படுத்தியது. இதனால் கழிவு காற்றோடு கலந்துவிட்டது. இது ஒரு தீர்வு போலத் தோன்றலாம்.

புகைக்கூண்டின் உயரத்தை அதிகப்படுத்திய தால், அந்தப் புகை செம்பரம்பாக்கம் ஏரி வரை பயணித்துப் படிந்தது. செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றி மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலைகள் ஏற்கெனவே அதிகம் உள்ளன. அண்மையில் ஏரியின் நீரை எடுத்து ஆராய்ந்ததில், அதில் கன உலோக அயனிகளின் (heavy metal ions) அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனால், பயன்பாட்டுக்கு உதவாத நீராக மாறுகிறது. இந்த விவகாரத்தில் புகைக் கூண்டின் உயரத்தை அதிகப்படுத்தியது, அறிவியல்பூர்வமான தீர்வா?

சூழல் – 2: குப்பை மலைகளை மடுவாக்க வேண்டாமா?

பள்ளிக்கரணையில் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியில் குப்பை மலைத்தொடர் இருக்கிறது. குப்பைகள் இவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பது வருமானத்தைக் குறைப்பதாக அரசாங்கம் நினைக்கிறபட்சத்தில், இதற்கான தீர்வு என்ன? குப்பை கொட்டப்பட்டுள்ள பரப்பளவைக் குறைத்து, அங்கே இன்னொரு மென்பொருள் நிறுவனத்தை அமைத்து, அதன்மூலம் வருமானம் ஈட்டலாம். ஆனால், அந்தநிறுவனத்தில் பணிபுரிபவர்களின் குப்பைகளும் அங்கேதான் கொட்டப்படும். குப்பை மலையின் உயரம் அதிகரிக்கும்.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று இரண்டு வகையாக நாம் பிரிக்கிறோம். மக்கும் குப்பைகளை உரமாகப் பயன்படுத்தலாம், ஞெகிழி போன்ற மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம். இவை மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் நவீன தொலைக்காட்சிப் பெட்டிகள், திறன்பேசி போன்ற மின்னணுச் சாதனங்களில் அலுமினியம், தாமிரம், தங்கம் என நாற்பது வகையான தனிமங்கள் இருக்கும்.

இவற்றைத் தனித்தனியாகப் பிரிப்பதெடுப்பது கடினம். மின்னணுச் சாதனங்களை உருவாக்கு வதைவிட இக்கழிவுகளை முறையாக அப்புறப் படுத்துவது கடினம். இதற்கான தீர்வை, அறிவியல் ஆய்வுகளின் மூலமே பெற முடியும்.

இதிலுள்ள சிக்கல், கட்டுமானப் பொறியியல், சுற்றுச்சூழல், பொருள்சார் அறிவியல், உற்பத்தி முறைப் பொறியியல் என்று பல்வேறு அறிவியல் துறை நிபுணர்கள் ஒன்றிணைந்து, இதற்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது.

ஆனால், இந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதன் மூலம், சுற்றுச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், மறுசுழற்சி செய்து கிடைக்கக்கூடிய பொருள்களின் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும். அதே நேரம், அந்த வழிமுறையைப் பல்வேறு இடங்களில் செயல்படுத்த முடியும்.

அறிவியல் மனப்பான்மையால் வேலைவாய்ப்பு: அறிவியல் பாடப் புத்தகங்களில், இயந்திரங்கள், உடல் உறுப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதற்கான விளக்கங்களாகவே அமைந்துள்ளன. இதன்மூலம், கேள்வி கேட்க, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.

இது வருத்தமளிக்கக்கூடிய விஷயம். அறிவியல்பூர்வமாகப் பார்ப்பது என்பது, பட்டப்படிப்புக்காக மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும். இந்தியாவில் கோடிக்கணக்கான சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள், குறைந்த செலவிலான மருந்து உபகரணம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை நல்ல உதாரணங்கள்.

மக்கள்தொகைக்கு ஏற்ப எத்தனை பேர் அறிவியல் ஆய்வுப் பணிகளில் இருக்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு லட்சம் பேருக்கு இந்தியாவில் வெறும் 22 பேர்தான். இதுவே, அமெரிக்காவில் 430 பேர், சீனாவில் 120 பேர். இந்தியாவில் சுமார் 1,000 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 400 ஆய்வு நிறுவனங்கள் உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் இருப்பவர்கள், ஆய்வாளர் பணியிடங்களை மட்டுமே நம்பியிருப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலையை உருவாக்குகிறது. இது அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்க முன்வருபவர்களைக் குறைக்கும்.

செயல்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த புதுத்தொழில்கள் (start-ups) இந்தியா வில் சுமார் 27,000. இந்திய மக்கள்தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 2 தொழில்களே உருவாகின்றன. இதுவே அமெரிக்காவில் 22 தொழில்கள், இஸ்ரேலில் 100 தொழில்கள்!

இந்தியாவில் நாம் தொழில் தொடங்க வேண்டுமென்றால், சாலையோரங்களில் பக்கோடா போடுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. பக்கோடா போடும் தொழில் தவறானது இல்லைஎன்றாலும், அறிவியல் சார்ந்த பணிகளை உருவாக்கும்போது, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும், காப்புரிமை பெற்றதொழில்நுட்பங்களைச் சந்தைக்குக் கொண்டு வரும்போது இந்தியப் பொருளாதாரமும் உயர்வடையும்.

- சென்னை ஐ.ஐ.டி. உதவிப் பேராசிரியர், hemazephyrs@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்