திருக்குறள் வாசிப்போம்...

By Guest Author

தமிழ் இலக்கியத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற நூலாகத் திருக்குறள் இருக்கிறது. உலகமே விரும்புகின்ற பொது அறத்தைத் திருக்குறள் பேசுகிறது. எக்காலத்திற்கும் பொருந்துகின்ற நிலைத்த அறத்தை வலியுறுத்தி கூறுவதால் இன்றளவும் எல்லோராலும் படித்துப் பயன்பெறுகின்ற நூலாகவும் இந்நூல் சிறந்து விளங்குகிறது.

வாசிக்கக் கற்றுக் கொண்ட ஒரு குழந்தைக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்த விரும்புகிற பொழுது மிக எளிமையான திருக்குறளின் வழியாக தமிழையும் அறத்தையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம்.

கதையும் குறளும்: திருக்குறளைக் குழந்தைகளுக்குக் குறளாகஅறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, திருக்குறள் கதைகளை அறிமுகம் செய்ய வேண்டும். நீதிக்கதைகள் எதுவானாலும் அதன் மையக்கருவாகத் திருக்குறளைப் பொருத்திப் பார்க்க முடியும்.

அப்படி, இல்லையெனில் திருக்குறள் கருத்துகளை உள்ளடக்கிய எளிய கதைகளை உருவாக்கிக் கூறுதல் என்பது குழந்தைகளுக்கு விருப்பமானதாக அமையும். கதைகளோடு இணைத்துச் சொல்லப்படுகின்ற நீதியும் நீதியை வலியுறுத்துகின்ற திருக்குறளும் குழந்தைகளின் உள்ளத்தில் நீங்காத அறவுணர்வை வளர்த்தெடுக்கும்.

குறளும் தொடரும்: திருக்குறளே மிக குறுகிய அடிகளைக் கொண்டதுதான். இருப்பினும் குழந்தைகளின் மனம் கொள்ளுமாறு திருக்குறளில் இருந்து "அறத்தான் வருவதே இன்பம்" , "கற்க கசடற" , "முயற்சி திருவினை ஆக்கும்" என்பன போன்ற இனிய திருக்குறள் தொடர்களை உருவாக்கி குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிற பொழுது குழந்தைகளின் உள்ளத்தில் அறமும் அன்பும் உருவாகும்.

குழந்தைகளுக்குத் திருக்குறளின் மீதும் பற்றுதல் உருவாகும். இது போன்ற சிறியதொடர்கள் திருக்குறளைக் கற்பதற்கான ஆர்வத்தை உண்டாக்குகிற வழியாகவும் அமையும்.

திணித்தல் இன்றி: குழந்தைகளுக்கு ஒன்றைக் கற்றுக் கொடுப்பது என்பதும் குழந்தை கற்றுக் கொள்ளுதல் என்பதும் எளிமையான செயல்தான். எப்பொழுது அது கடினச் செயலாக மாறுகிறது எனில் குழந்தைகளின் சிந்தனைக்கும் மனநிலைக்கும் எதிராக ஒன்றைத் திணிக்கின்ற பொழுது முரணாகவும் குழந்தைகளின் உள்ளம் ஏற்காத ஒன்றாகவும் மாறிவிடுகிறது.

குழந்தைகள் உலகம் என்பது கதைகளும் பாடல்களும் நிறைந்த உலகம். இதனை உணர்ந்து உலகம் போற்றும் "பொது மறையைக்" கதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் தினம் ஒரு திருக்குறளை குழந்தைகளிடம் திணித்தல் இன்றி கொண்டு சேர்க்க வேண்டும்.

இப்படித் திருக்குறளைக் கொண்டு சேர்க்கின்ற பொழுது அறம் சார்ந்த புதிய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் திருக்குறள் குழந்தைகளின் உள்ளத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.

- மகா.இராஜராஜேசாழன் | கட்டுரையாளர், தமிழாசிரியர், எஸ்.ஆர்.வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE