வாழ்வை நல்வழிப்படுத்தும் நாளிதழ் வாசிப்பு

By செய்திப்பிரிவு

கடந்து வந்த பாதைகளை கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது, இப்போதுள்ள சமூகம் சிறப்பான கற்றல் முறை என்னும் ஒன்றை மறந்துவிட்டது. எல்லோரும் கையில் ஒரு கையடக்க கருவியிடம் மாட்டி கொண்டு வாசிக்கும் பழக்கம் இன்றி அதிகம் கற்றுக்கொள்ள மறுத்து வருகிறோம்.

ஒரு காலகட்டம் பத்திரிகைகள், இதழ்கள் நடத்தி அறியாமை எனும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி சுதந்திரம் என்னும் இனியமூச்சினை சுவாசிக்க செய்தவர்கள் பலரும் உள்ளனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு ஆயிரம் உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பத்திரிகைகளின் பெரும் பங்கு: எண்ணிலடங்கா பெருந்தலைவர்கள் உருவாகி நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகித்ததில் பத்திரிகைகள் பெரும்பங்கு வகித்தன என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஒரு சில தலைவர்கள் பள்ளிக்கூடம் செல்வது கூட இல்லாமல் தினமும்வெளிவரும் நாளிதழ்கள் படித்து பெருந்தலைவர் ஆகி நாட்டை ஆண்டு பலசாதனைகள் புரிந்து இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர் என்பது வாசித்தல் என்பதற்கு பெருமை சேர்க்கும்.

தட்டியெழுப்பும் வாசிப்பு: பத்திரிக்கை பல மக்களுக்கு பலவற்றை அறியும் மிகவும் எளிய ஊடகமாக திகழ்ந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. சுதந்திர தாகம் தீர பல மேம்பட்ட அருமையான பயன்பெறும் பல நல்ல கருத்துக்கள் கூறி உறங்கிய மக்களை எழுப்பி முன்னேற செய்தவர்கள் பின்னாளில் நாட்டின் மாபெரும் தலைவர்களாகவும் உதித்தார்கள். பெரும்பாலான நாளிதழ்கள் நடத்தவே எதிர்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் எதிர்த்து நடத்திய பெருமை பல பெருந்தலைவர்களை சேரும்.

பத்திரிகையாளராகத் தனது சமூக வாழ்க்கையைத் தொடங்கி பின்னாளில் மாபெரும் புரட்சியாளராகவும் அரசியல் தலைவர்களாகவும் உருவெடுத்தவர்கள் உலகெங்கிலும் உண்டு. கம்யூனிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ் தொடங்கி நவீன இந்தியாவின் சிற்பிகளான காந்தியடிகள், அம்பேத்கர், பெரியார் என உலகம் வியந்து பார்த்த அபாரமான இதழியலாளர்கள் பலருண்டு.

வாசிக்கும் மாணவர்களுக்குப் பரிசளிப்போம்! - இப்போதைய காலகட்டம் எல்லோருமே ஏன் வெகுவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல், எதனை பிடிக்க வேண்டும் என்பது அறியாமல் தினமும் எழுந்து போகிறோம் மீண்டும் மீண்டும்.

வாசிக்கும் பழக்கம் குறைந்து இப்போது எல்லோரும் கையடக்க கருவியிடம் மாட்டி கண்கோளாறு, காது கேளாத பிரச்சினை என்று எல்லா வகையிலும் சிக்கி தவித்து வருகிறோம். கைக்குழந்தை கூட இப்போது கையடக்க கருவியை கையாள்கிறது. எப்படி என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்! கருவில் இருக்கும் போதே கற்றுக்கொண்டிருக்கும் போல.

இதுபோன்ற பலவற்றை நாம் எல்லோரும் கடக்க வாசிக்கும் பழக்கம் கொண்டு வர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், வீடு, பொதுநூலகம் என்று எல்லா இடங்களிலும் நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் செயல் முறைக்கு வர வேண்டும் என்பதை உணர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

அவ்வாறு நாளிதழ்களை முறையாக வாசித்து அதில் உள்ள செய்திகளை சரியாக கிரகித்துக் கொண்டு சமூக அக்கறையோடு வளரும் மாணவர்களுக்கு பரிசுகள், வெகுமதி என்று அளிக்கவேண்டும். நிச்சயம் வாசிப்பு என்பது வாழ்வை நல்வழிப்படுத்தும்.

- கட்டுரையாளர்: விரிவுரையாளர், கணிதத்துறை, அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE