மெல்ல மலரும் தருணம்

By செய்திப்பிரிவு

குழந்தைகளின் கற்றல் உலகம் மிக விந்தையானது. எல்லா குழந்தைகளும் திறன் படைத்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். அந்த திறன்களை கண்டறிந்து வழிநடத்துவதில் தான் பெரும் சிக்கலே இருக்கிறது. குழந்தைகளின் திறன்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத்தான் தனித்திறன் தேவை.

இதை எப்பொழுது உணர்கிறோமோ அப்போதுதான் மாற்றங்கள் மெல்ல மலரத் தொடங்கும். அவற்றை புரிந்து கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும்தான் எப்போதுமே போராட்டம் உள்ளது. கலைத் திருவிழா வந்தது. நாடகத்திற்கான இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பும் ஒட்டிக்கொண்டது. குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை ஒன்றிணைத்து குழுவிற்கு குக்கூ என்ற பெயரிட்டோம்.

குழு உறுப்பினரை தேர்வு செய்ததே பெரும் கதை. நன்றாக படிக்கும் மாணவர்களை தவிர்த்து, வகுப்பிற்கு ஒழுங்காக வருகை தராமல் வெளியே பொழுதை வீணாக கழிக்கும் மாணவர்கள். வகுப்பறைக்குள் இருந்தாலும் அனைவரையும் தன் செயல்பாடுகளால் தொந்தரவு செய்யும் மாணவர்கள். கற்றுக் கொள்வதில் பெரிய சிரமத்தை உணர்ந்த மாணவர்கள். தேவையில்லாத பழக்கத்திற்கு ஆளான மாணவர்கள். அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள்.

அடாவடியாகப் பேசுபவர்கள். இப்படியான நபர்களை தேர்வு செய்து குழுவாக அமைத்தோம். போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளை தொடங்கினோம். முதல் மூன்று நாட்கள் "இது சரிப்பட்டு வராதோ" என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு நடந்து கொண்டனர். நான் கிட்டத்தட்ட விரக்தி நிலையை அடைந்து மிகுந்து சோர்வுற்றுக் காணப்பட்டேன். அந்தச் சூழலில்தான் அவர்கள் கவனிக்கத் தொடங்கினர்.

கொஞ்சம் காது கொடுத்தனர். வடிவங்களை புரிந்து கொண்டனர். வசனங்களை பேசத் தொடங்கினர். உணர்வு கூட்டினர். ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சும் வண்ணம் நடிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் தனித்து உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தோம்.

அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் பார்வையாளர்களை (மாணவர்களை) அனுமதித்தோம். ஆரம்பத்தில் தயங்கினர். பார்வையாளர்களை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். பிறகு பழகிக் கொண்டனர். சிறிய பார்வையாளர் கூட்டம் பெரிதானது. ஒரு நாள் ஒட்டுமொத்த பள்ளியே பார்வையிட்டது. ஒவ்வொரு வசனத்திற்கும் சிரிப்பும் கைதட்டலும் தூள் பறந்தது. இறுதிக் காட்சியில் மகளாக நடித்த மாணவி கேரக்டராகவே மாறி நிஜமாக கண்ணீர் விட்டு அழுது நடிப்பதை கண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கண்கசிந்தனர்.

அன்று நிகழ்வு தொடங்கும் போது இவ்வளவு பெரிய கூட்டத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் என் முகம் முழுவதும் அப்பி கிடந்தது. நாடகம் முடியும் வரை நான் மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். அவர்கள் மிக இயல்பாய் நடித்துக் கொண்டே இருந்தனர். நாடகம் முடிந்ததும் கைதட்டுச் சத்தம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. அனைவரின் பாராட்டும் அவர்கள திணறிப் போகச்செய்தது. "எதற்குமே சரிப்பட்டு வரமாட்டார்கள்" என்று நினைத்த குழந்தைகளின் திறன் வெளிப்பட்டதும் அனைத்து ஆசிரியர்களும் மனதாரப் பாராட்டினர். பக்கம் பக்கமாய் வசனங்களை மனனம் செய்து நேர்த்தியாய் பேசும் குழந்தைகள், மூன்று வரி கேள்வி பதிலை படித்துக் கூறுவதில் ஏன் சிரமப்டுகிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்து விரிந்து நீண்டு கொண்டே இருக்கிறது.

- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குலமங்கலம், மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

20 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்