ரசித்து வாழலாம் வாங்க!

By செய்திப்பிரிவு

‘ஏழை மனது பெற்றோர், பேறு பெற்றோர்’ என்ற விவிலிய வாசகத்தின் அர்த்தத்தினைப் பற்றி சிந்தித்திடுகையில் ஏற்பட்ட மனதின் வெளிப்பாடு இந்த பதிவு. இங்கு குறிப்பிடப்படுவது ஏழ்மை நிலையையோ, வறுமையை பற்றியதோ அல்ல. நாம் பெற்றுள்ள வளங்களை அள்ளிக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன், மனநிறைவுடன் வாழ்ந்திட வேண்டும். எவ்வளவு உன்னதமான ஆழ்ந்த கருத்து என்று எண்ணி வியப்புற்றேன்.

நாம் பெற்றிருக்கின்ற செல்வத்தையும், வளங் களையும் பற்றிய நமது மனதின் உயர்வான எண்ணங்கள் இருக்கும்போது பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படமாட்டோம். பிறரது முன்னேற்றத்தைக் கண்டு போட்டி போடாமல் வாழ்வை இனிமையாக ரசித்து வாழ முடியும். நமது அலுவலக சூழலிலும்கூட பிறரது பதவி உயர்வு கண்டு காழ்ப்புணர்வு கொள்ளாமல் இருக்க முடியும். நமது உள்ளத்தில் நன்றி உணர்வு என்ற உன்னதமான குணநலன் அமையப் பெற்றால் இந்தப் பிரபஞ்சமே நமது அனைத்து எண்ணங்களையும் ஈடேறச் செய்யும் என்று ஒரு சில உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றியுணர்வு: நமது மனதில் நன்றியுணர்வு குடிகொள்ளும் போது மனமானது பிறரது குற்றங்களை மன்னிக்க தயாராகிறது. பிறரது பிழைகளை மன்னிக்கும்போது நமது பிழைகளும் மன்னிக்கப்படுகிறது அடுத்தவரது துன்பம் கண்டு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது நமது துன்பத்தினை பகிர்ந்திட யாரோ ஒருவர் நிச்சயமாக பிரபஞ்ச சக்தியினால் அனுப்பப்படுகிறார்.

நமது உடலே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது. இப்பிரபஞ்சமும் பஞ்சபூதங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நமது உடலைப் பேணிப் பாதுகாக்கும்போது மனதினையும் போற்றிப் பாதுகாத்திடுவது மிக முக்கியமான பணி. மனதினை பேணுவது என்பது பெரிய கடினமான செயல் அல்ல. பிறரின் மீது ஏற்படும் கோபம், வெறுப்பு, வன்மம், போட்டி, பொறாமை, பகை உணர்வு, வன்முறை இவற்றை விட்டாலே போதும். நமது மனமானது அமைதி நிலையை அடைந்துவிடும்.

எதுவும் அற்ற காலியான மனமானது அலைபாய ஆரம்பிக்கும். அதனை நேர்மறை எண்ணங்களால் இட்டு நிரப்பும் போது வாழ்கின்ற வாழ்வு அர்த்தம் பெறுகிறது.

நேர்மறை எண்ணங்கள்: நேர்மறை எண்ணங்கள் என்பது கள்ளங்கபட மற்ற என்று சொல்கின்ற சின்னஞ்சிறு குழந்தையாக நாம் இருக்கும்போது நம் அனைவரிடமும் அதிக அளவில் காணப்பட்ட குணங்களான பிறரிடம் அன்பு செலுத்துதல், நன்றியுணர்வு, பாராட்டும் பண்பு, மன்னிக்கும் நற்குணம், உதவி செய்தல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, செடி, கொடி, மரம், விலங்கு மற்றும் பறவைகளிடமும் அன்பு செலுத்துதல் போன்ற குணங்களேயாகும். நாம் வளர வளர நம்மிடம் இயற்கையாகவே தென்பட்ட மேற்கூறிய அனைத்து குண நலன்களும் படிப்படியாக குறைய ஆரம்பித்து எதிர்மறை எண்ணங்களான கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை மனதில் குடிகொள்ள தொடங்கி விடுகிறது.

சிந்திக்கத் தவறுகிறோம்: எதிர்மறை எண்ணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையே. போட்டி ஏற்படும்போது பொறாமை ஆகிறது. பொறாமை வந்தால் சிந்திக்கத் தவறுகிறோம். பின்பு அது கோபமாக மாறுகிறது. நெடுநாளைய கோபம் வெறுப்பு என்னும் வேறொரு வடிவம் எடுக்கிறது. இந்த வெறுப்பு பகையாக மாறி வன்முறையில் ஈடுபட தூண்டுகிறது. உலக நாடுகள் இடையே ஏற்படும் போர்களுக்கு மிக முக்கிய உந்துதலாக இருப்பது மேற்கூறிய எதிர்மறை எண்ணங்களே.

“வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை” என்று எங்கோ படித்த வாசகங்களை நினைவுக்கு வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எளிமையின் உருவான, மனித வடிவில் இந்த மண்ணில் உதித்த ஒரு மகானாகிய இயேசு பிரானை இன்றும் உலகின் பல நாடுகளிலும் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். அவரது பிறந்த நாளை எளிமையின் பெருவிழாவாக கொண்டாடி வருகிறோம். அவரது மன்னிக்கும் குணத்தினையும் மனதில் உள்வாங்கினால் இந்த உலகம் அமைதி பூங்காவாக திகழும்.

“வாழும் ஒவ்வொரு நொடியும்

நிச்சயமற்றதாக இருக்கும்போது

கோபம், பொறாமை, வெறுப்பு மட்டும்

ஏன் நிலைத்திருக்க வேண்டும்?

மன்னிக்கப் பழகுவோம்!

வாழ்வின் இனிமையான தருணங்களை

நிலை நிறுத்தி வரலாறு படைப்போம்!”

கட்டுரையாளர் தலைமை ஆசிரியர், பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை,மதுரை மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்