வெற்றியின் மந்திரம் விடாமுயற்சி

By செய்திப்பிரிவு

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு கல்லூரி மாணவியின் விடா முயற்சியினை பற்றி உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. இன்றைய கால இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் மாணவி ஜெயவாணியின் விடாமுயற்சியினையும் தன்னம்பிக்கையும் கண்டு வியப்புற்றேன்.

நாகமலையில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும் தனது விடா முயற்சியால் கல்லூரி மூலம் கலந்து கொள்ள முடிந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசுகளை அள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.

பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே ஆண் பிள்ளைகளுக்கு நிகராக தானும் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் எறிபந்து மற்றும் கையுந்து பந்து போன்றவற்றில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட இவர், கல்லூரியிலும் மிகச்சிறந்த விளையாட்டு அணியை வழி நடத்தும் திறன் பெற்று திகழ்ந்தார்.

அப்பா தந்த ஊக்கத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வி பயிற்சி படிப்பில் சேர்ந்துள்ளார். வறுமையிலும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியுமே அவரது அணிகலன்கள். படித்துக் கொண்டே பகுதி நேரமாக வேலை பார்த்து பெற்றோரின் பொருளாதார சுமையையும் பகிர்ந்து கொள்ளும் இந்த மாணவி எனது மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டாள். தனக்கு பிடித்த விளையாட்டு துறையில் சாதித்திட வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படும் இவளை போன்ற இளம் தலைமுறையினரை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி வாழ்வில் உயர்த்திட மாநில அரசும் மத்திய அரசும் முனைந்திட வேண்டும்.

“22 வயது கல்லூரி மாணவி
முகத்தில் புன்னகை;
கண்களில் நம்பிக்கை;
மனதில் தன்னம்பிக்கை;
செயலில் விடாமுயற்சி,
வெற்றியின் மந்திரமாக”

கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல் நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE