அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போல் பாரம்பரிய விளையாட்டுகள் திருவிழா வேண்டும்

By செய்திப்பிரிவு

மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக 13,125 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் 6-12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை சங்கமம், நுண்கலை, கவின் கலை, கருவி இசை, மொழித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் 196 வகைகளில் பள்ளி அளவில் வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதன் அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டி டிச. 27 முதல் 30 வரை சென்னையில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

மாணவ, மாணவிகளிடம் உள்ள பல்வேறு வகையான திறன்களை வெளிப்படுத்த கலைத் திருவிழா நல்லதொரு மேடை அமைத்துக் கொடுத்துள்ளது. பாடநூலுக்கு அப்பாலும் இவர்கள் ஜொலிக்கிறார்கள். இதுபோல தமிழர்களின் பராம்பரிய விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

பாரம்பரிய விளையாட்டு: புனல் விளையாட்டு பொழிதல், பந்தாட்டம், மல்லாடல், களைக்கூத்து, வல்லாட்டம், கிட்டி புல், பச்சை குதிரை, எறிபந்து, காற்றாடி விடுதல், பட்டம் உள்ளிட்டவைகள் தொன்மை கால விளையாட்டுகளாக அறியப்படுகின்றன.

அச்சு பூட்டு, இசை நாற்காலி, ஒத்தையா ரெட்டையா, ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, கண்கட்டிவிளையாட்டு, கல் எடுத்தல், காயா பழமா, தட்டாங்கல் ஆட்டம், தவளை விளையாட்டு, நொண்டி, பூப்பறிக்கிறோம் வருகிறோம் உள்ளிட்டவை சிறு விளையாட்டு பிரிவில் வருகின்றன.

தாயக்கட்டை, சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடும் புலியும், பாம்பும் ஏணியும், பாண்டி, பம்பரம், மூன்று கல் ஆட்டம், மூன்றுகல் ஆட்டம், உப்பு தூக்குதல், சங்கு சக்கரம், சீதைப் பாண்டி ,நொண்டி, மந்தி ஓட்டம், அணில் பிள்ளை, நாயும் இறைச்சியும், சிலம்பம், பானை உடைதல், உரிமரம் ஏறுதல், அம்மானை, ஊஞ்சல், கழங்கு, குரவை, வள்ளை உள்ளிட்ட விளையாட்டுக்கள் நம் தமிழ் சமூகத்துடன் இரண்டற கலந்து நின்றவை. இன்றைய காலகட்ட மாணவர்களுக்கு இத்தனை விளையாட்டுக்கள் இருக்கிறதா? இதை எப்படி விளையாடுவது என்பதுகூட தெரியாது.

விளையாட்டுகளின் சிறப்பு: நிற்பது, நடப்பது, ஓடுதல், தாவுதல், குதித்தல் ,ஏறுதல் இறங்குதல், எறிதல், பிடித்தல், அடித்தல் போன்ற பல்வேறு வகையான உடல் உறுப்புகளின் ஒருமித்த இயக்கங்களின் உன்னத வெளிப்பாடுகளாகவே விளையாட்டுக்கள் உருவாகி இருக்கின்றன.

வேலெறிதல், குதிரைச்சண்டை, ஏறு தழுவுதல், குதிரை ஏற்றம் வீரத்தை சொல்கிறது. ஆதிகால மனிதர்கள் ஓய்வு நேரங்களில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த பயிற்சியே அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளவும், வெற்றி பெறவும், போராடவும், நெருக்கடிகளை சமாளிக்கவும், வெற்றி தோல்விகளை தாங்கிக் கொள்ளவும் தேவையான மனப் பக்குவத்தை கொடுத்தது. உடற்பயிற்சிகள் எல்லாம் விளையாட்டு வடிவத்திலே உள்ளன. மன வலிமையும், உடல் வலிமையும் நாணயத்தின் இரு பக்கம் போன்றவை.

விளையாடும் போது, மனப்பக்குவம், விட்டுக் கொடுத்தல், தலைமைப் பண்பு , விதிகளை மதித்து நடத்தல், நேரம் மற்றும் கடமை தவறாமை, உண்மை, உடல் வலிமை, பொழிவு, நல்லஉறக்கம், நல்ல பசி, தூய எண்ணம், தெளிந்த சிந்தனை வெற்றி தோல்வி ஏற்கும் மனப்பாங்கு ஏமாற்றத்தை தாங்கும் திறன், ஒழுக்கம் ஆகியவை ஏற்படுகிறது.

விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு மேல் படிப்பு, அரசுப் பணிகளில் சிறப்பு ஒதுக்கீடு உண்டு என்பது பற்றி மாணவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தரமான வீரர்களை உருவாக்குவது பள்ளிகள்தான். அதற்கான அடித்தளம் பள்ளிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும்.

வேகமாக அழிந்தும் நசிந்தும் மறக்கப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டுகளை பள்ளி மாணவ மாணவிகள் வாயிலாகத்தான் மீட்டெடுக்க முடியும். அதற்கு கலைத் திருவிழா மாணவ, மாணவிகளுக்கு மேடை அமைத்து கொடுத்ததுபோல் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர் களுக்கு விளையாட்டு திருவிழா புதிய வாசலை திறக்கட்டும். - ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம், ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்