பெரிதினும் பெரிது கேள் | பாரதியார் பிறந்த நாள் 140

By ந.கவிதா

பாரதியின் தந்தை தன் மகன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கண்டிப்புடன் வளர்த்தார். ஆடி ஓடி, குளங்களில் நீச்சலடித்து, மரங்களில் ஏறி இறங்கி, விளையாட்டாகப் பேசியும் மகிழ்ந்தும் தம் வயதொத்த குழந்தைகளோடு விளையாட இயலாத பாரதி, தன் தந்தைக்கு அஞ்சிவீதியிலே நடைபெறும் எந்த விளையாட் டிலும் பங்குகொள்ளாமல், தோழர்கள் இன்றி, வீட்டில் இருந்த நூல்களின் துணையோடு தனியாக இருந்தேன் என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார்.

ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையை இழந்து, அத்தையின் உதவியோடு காசிக்கு சென்று, வேதங்களையும் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் பாரதி. கவிஞராக, இதழியலாளராக, விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளராக, யாருக்கும் அஞ்சாத்திறம் கொண்ட கொள்கையாளராக, தத்துவவாதியாக பல்வேறு பரிமாணங்களில் அறிவுக் கிளைபரப்பி நின்றார்.

தமிழெனும் நிலத்தில் வேர்: ஆனாலும் தன் படைப்பாற்றலின் வேரை ஊன்றியது அமிழ்தினும் இனிய தமிழ் எனும் நிலத்தில்தான். அவ்வாறு வேர்விட்டு நின்ற பாரதிக்குப் பற்றுக்கோடாக இருந்தவை கவிதையும் அக்கவிதைக்குள் அவர் கொண்ட உலக உயிர்கள் யாவற்றின் மீதான அன்பும்,பேதமில்லா நேசமும், அறிவினாலாகிய தெய்வமும் தான்.

நெல்லைக்குக் கல்வி பயிலச் சென்ற அவருக்கு, அந்தக்‌ கல்விமுறையும் பாடங்களும் பிடிக்கவேஇல்லை. சிங்கக்குட்டியை புல் தின்னச்‌ சொன்னது போலத்தான், தனக்குப் பிடிக்காத ஆங்கில முறைக் கல்வியைக் கற்கச் சொல்வது என்று வேதனை கொண்டார். கவிதைப் பேராற்றலுக்குள் அவ்வேதனைக்கான மருந்தைக் கண்டடைந்தார்.

சர்வ ஜன மித்திரன்‌ என்ற பத்திரிகையில்‌ பணக்காரர்களைக் கடுமையாகத் தாக்கி ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரை எட்டையபுர அரசரைக் குறித்துத்தான் எழுதப்பட்டது என்று யாரோ அரசரிடம் சொல்லிக் கொடுக்க, 257 ரூபாய் சம்பளத்தில் பாரதி அமர்ந்திருந்த வேலை பறிபோனது. நண்பர்கள்‌ அர சரோடு பாரதிக்குச் சமரசம்‌ செய்து வைக்க முயன்றபோது, பாரதி மறுத்தார்.

அத்துடன், ‌“எட்டயபுரம்‌ ராஜா சுண்டைக் காய்‌ அளவுக்குப்‌ பூமியை வைத்துக்‌ கொண்டிருப்பவர்‌. உலகம்‌ மிகப்பெரியது. அதிலே எனக்கு இடம்‌ இருக்கிறதென்று சொல்...‌” என்று தன் கொள்கையின் மீது அசைத்திட இயலாத உறுதி கொண்டு கவிஞனுக்கேயான வறுமையை மீண்டும் தேர்ந்து கொண்டார். வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற மேன்மையான எண்ணம் கொண்ட பாரதி, திருவினை வென்று வாழ்ந்த பெருங்கவிஞன்.

காலம் வென்ற மகாகவி: ஒளிபடைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சு, தெளிவு பெற்ற மதி என பாரதி வரவேற்ற இளைய பாரதத்தின் தேவை, நாடு விடுதலை பெற்றதோடு முடிந்துவிட்டதா... கேளிக்கை ஊடகங்கள், பொழுது போக்குச் சாதனங்கள் என யாவற்றாலும் நம் மூளையின் எல்லா அறைகளையும் நிரப்பிவிட்டு, அவற்றி லிருந்து விட்டு விடுதலை ஆகாமல் கிடக்கிறோம். நாம் பெற வேண்டியது மனதின், அறிவின் விடுதலை. அந்தச் சிட்டுக் குருவியைப் போல.

பல்லாண்டுகள் கணிதத்தைப் பயின்றாலும், வானின் நட்சத்திரங்கள் குறித்து அறியாதிருப்பதும்; காவியங்கள் பல கற்றாலும் அதற்குள் இருக்கும் கவிநயத்தைக் காணத் திறமில்லாது இருப்பதும்; வணிக நூல்கள் பயின்றாலும் தான் வாழ்கின்ற நாட்டின் பொருளாதாரச் சூழலை அறியாமல் இருப்பதுமா சிறந்த கல்விமுறை என்று விமர்சிக்கின்றார் கவிஞர்.விரும்பிக் கற்பதும், இலக்கிய நலத்தில் தோய்வதும், சரித்திரத்திலே தேர்ச்சி கொள்வதும், கலைகளில் ரசனை கொள்வதும், இனிமையான இவ்வுலகின் உயிர்களிடத்தே அன்பு கொள்வதும், பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொள்வதும், வையத் தலைமை கொள்ளும் மானுட மாண்பைப் பெறுவதும் இவ்வாழ்வின் பெரும்பயன்கள் என்றுரைத்த மகா கவிஞன், காலனை எதிர்கொள்ளும் போதும் துணிந்து நின்றான். தன் கவிதையாகிய நல்ல விதைகளை இந்த நிலத்திலே தேர்ந்து தூவிச் சென்றான். - கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்