கலங்கரை விளக்கமாக கருதினால் கண்டிப்பும் இனிப்புதான்

By செய்திப்பிரிவு

கண்டிப்பு என்பது என்ன? அது வளரும் சமுதாயத்தின் வளர்ச்சி. மாணவர்கள்தான் நம் நாளைய சமுதாயத்தின் ஊன்றுகோல். கண்டித்து கெட்டவன் உண்டா என்றால் இல்லை என்பதுதான் பலரின் பதில். நமது வீட்டின் பெரியவர்கள் நம்மை கண்டிக்கும் போது நமக்கு கசக்கத்தான் செய்யும். ஏன் உங்களைப் போல் தான் நானும் உங்கள் வயதில் அதையும் கடந்து வந்தது அனைவருக்கும் தெரியும். வீட்டுக்கு வந்தாலும் கடுப்பா இருக்கும், பள்ளிக்கு போனாலும் கடுப்பாக இருக்கும் என்று சும்மா ஏதாவது பேசிக் கொண்டே தான் இருப்பார்கள் என்பது பலரின் எண்ணம்.

நான் கண்டிப்புடன் வளர்ந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இன்று என் வாழ்க்கை இனிப்பாக இருக்கிறது. "முறுங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும் பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும்'' என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுவார். அதற்கு அர்த்தம் அப்போது புரியவில்லை. இன்று நான் அம்மாவாக ஆனபிறகு தான் எனக்கு புரிகிறது. குழந்தையை எப்படி வளர்த்தால் அதன் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வது தாயின் கடமை. ஒரு குழந்தை தன் தாயிடம் இருப்பதைவிட ஆசிரியரிடம் இருக்கும் நேரமே அதிகம். இதை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த கண்டிப்புடன் நடந்து கொள்வது ஒன்றும் தவறில்லை.

ஒரு சில ஆசிரியர் செய்யும் தவறுகளைக் காரணமாகக் கூறி மற்ற ஆசிரியர்களையும் தவறாகச் சித்தரித்து காட்டக்கூடாது. ஆசிரியர்கள் தனது குழந்தையை பார்ப்பதைக் காட்டிலும் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம்தான் அதிக நேரத்தை அக்கறையுடன் செலவிடுகிறார்கள். கண்டிப்பு எவ்வளவு கடினம் என்று கண்டிக்கும் அனைத்து ஆசிரியர்களும் அறிவர். இன்று பெரிய பதவியில் இருக்கும் பலரும் அவர்களது பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். இன்று நல்ல நிலையில் இருக்கும் அவர்களுக்கு அந்த நினைவுகள் மனதில் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கத்தான் செய்யும்.

கடல் மிகவும் ஆழமானது, அற்புதம் நிறைந்தது. அதுபோலத்தான் மாணவர்கள் மனதும் கடலைவிட மிக ஆழமானது. மாணவர்கள் மனதை புரிந்து கொள்வது மிகவும் கடினம்தான். இருப்பினும், அவர்கள் மனதைப் புரிந்து கொண்டு அவர்களை சிற்பம்போல செதுக்குவதற்கு ஆசிரியர்கள் மெனக்கெடுவதை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும் பரிகாசம் செய்யாமலாவது இருக்க வேண்டும். "ஆசிரியரிடம் அடி வாங்காதவன், சமூகத்தில் பெரிய அடியாக வாங்குவான்" என்று கிராம மக்கள் சொல்வார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்துநன்கு படிக்க வைக்கவே விரும்புகிறார்கள்.

ஆனால், மாணவர்கள் சரிவர படிப்பதில்லை. ஒழுங்காக வகுப்புக்கு வருவதில்லை. சக மாணவர்களிடம் சண்டை என பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம்தான். "தற்போது கண்டிப்பாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை எங்கள் குழந்தைகளை ஏன் அடித்தீர்கள் என்று சொல்லி திட்டியதும், மனித உரிமை மீறிய செயல் என்றுமனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்ததும் ஆசிரியர்களை இயந்திரம் போல செயல்பட வைத்துவிட்டது” என்றுகல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களின் அருமையைபுரிந்து கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். ஆசிரியர்களை கலங்கரை விளக்கமாக கருதினால் கண்டிப்பும் இனிப்புதான் என்பதை காலம் உணர்த்தும்.

கட்டுரையாளர்

ஆசிரியை

பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி,

நாகமலை, மதுரை மாவட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE