மெல்ல மலரும் பூக்கள்

By செய்திப்பிரிவு

எட்டாம் வகுப்பில் கங்கா என்றொரு மாணவி. மனநலம் குன்றியவர். முதல் வரிசையில் சிரித்தபடியே உக்கார்ந்திருப்பார். வகுப்பில் அவர் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே கங்கா பெயரை இடையிடையே உச்சரித்துக் கொண்டே இருப்பேன். ஏதாவது கேட்பேன். சிரிப்புமட்டும் பதிலாக வரும். நானும் சிரித்துக் கொள்வேன். ஒரு நாள் நாளமில்லா சுரப்பிகள் பற்றிய பாடம். முதலில் அச்சுரப்பிகளின் அமைவிடத்தை மாணவர்களுக்குக் காட்டனும். பிளாஸ்டிக் மாதிரி ஒன்றை கையில் வைத்திருந்தேன். எல்லோரையும் பார்க்கவைத்து அறிமுகம் செய்தாயிற்று. பாடமும் நடத்தி முடிந்தது.

கங்காவிற்கு ஸ்பெஷல் முயற்சி. கண்,காது, மூக்கு, வாய் என தொட்டுக் காட்டி தொடக்கப் பள்ளியில் செய்வதுபோல இதை செய்ய முடி வெடுத்தேன். மற்ற மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். ஆள் காட்டி விரலை என் உச்சந்தலையில் வைத்துஒரு குதி குதித்தபடி ‘பிட்யூட்டரி' என்பேன். கங்காஅப்படி விரலை வைத்துக் கொண்டு சிரித்தபடியே குதிக்க மட்டும் செய்வார். ‘தைராய்டு' என்று சொல்லிக் கழுத்தில் இரண்டு பக்கமும் விரல்களால் தொட்டு ஒரு குதி. இப்படி கங்காவும் நானும்வகுப்பறையில் ஒரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்தோம்.

நாங்கள் குதிக்க குதிக்க வகுப்பே, பின்னால் திரும்பித் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. அப்புறம்பொறுக்கமாட்டாமல் ‘‘சார்.. சார்.. சார்.. என மொய்த்துக் கொண்டனர். ‘எங்களுக்குமே அதைப்போல ஏன் சொல்லிக் காட்டவில்லை.?' என அடம் பிடித்தனர். கங்காவும், நானும் உச்சந்தலையைத் தொட்டுக் குதிக்க வகுப்பே ஒரு குதி குதித்தது. ‘அட்ரினல்' என்றதும் கங்கா சரியாக ரெண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ஒரு குதி குதித்தார். நிச்சயமாக அட்ரினல் என்று சொல்லத் தெரியாது அக்குழந்தையால். ஆனாலும் வரிசைப்படி நான் சொல்லி வரும்போது சரியாக கங்காவின் கைகள் இடுப்புக்கு போய்நின்றன. ஏற்கனவே கிட்னி என்கிற பாகத்தை அறிமுகம் செய்யும் போது கங்காவுக்கு இடுப்பில் ரெண்டு கைகளையும் ஸ்டைலாக வைத்து கிட்னியின் (சிறுநீரகம்) அமைவிடத்தை சொல்லிக் காட்டியிருக் கிறேன்.

அந்த கிட்னி மேலே தொப்பி போல அமைந்திருக்கும் சுரப்பிதான் அட்ரினல். வகுப்பே ஸ்டை லாக இடுப்பில் கைகளை வைத்து ஒரு குதி. இது நடந்தது ஏழாம் வகுப்பில் என்று நினைக்கிறேன். அதே கங்கா ஒன்பதாம் வகுப்பில் என்னிடம் வந்து சேர்ந்தார். வகுப்பில் புதிய மாணவர்களும் இருந்தனர். ஒன்பதாம் வகுப்பில் அதே நாளமில்லாச் சுரப்பி பாடம் விரிவாக தரப்பட்டிருக்கும். முதலில் அடிப்படையைப் புரியவைக்க நினைவூட்டும் வகுப்பு. புதிய மாணவர்களில் இருவருக்கு மட்டும் உடலில் கிட்னி இருக்கும் இடமே தெரியவில்லை. கங்காவைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டே எழுந்து நின்று ரெண்டு கைகளையுமே ஸ்டைலாக இடுப்பில் வைத்துக் கொண்டு சிரித்தார்.

ஏழாம் வகுப்பில் எங்கள் வகுப்பறையிலிருந்த எல்லாரும் சிரிக்கின்றனர். புதிய மாணவர்களுக்கு குதித்தபடி கங்கா வகுப்பெடுத்தார். நம் அணுகு முறையிலும், உடன் பயிலும் குழந்தைகளின் ஒத்துழைப்பிலும் கங்கா மெல்ல மலர்வதைக் கண்கூடாகப் பார்த்தேன். இது அரசுப் பள்ளியில்தான் சாத்தியமாகிறது. பத்தாம் வகுப்புக்குப் பிறகு தொடர முடியாத கங்கா, இப்போது நான் பள்ளிக்கூடத்திற்கு நடந்து போகிற வழியில் வீட்டுக்கு வெளியே உக்கார்ந்து துணி துவைத்துக் கொண்டோ, பாத்திரம் துலக்கிக் கொண்டோதான் இருக்கிறார். என்னை பார்த்ததும் எழுந்து நின்று நெற்றியில் கை வைத்து வணக்கம் சொல்கிறார். ஒருநாள் அவரது அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது இடைமறித்து ‘‘கிட்னி எங்கருக்குன்னு சொல்லவா சார்?’’ என்றபடி ரெண்டு கைகளையும் இடுப்பில் வைத்து காட்டும் கங்காக்கள் உங்கள் வகுப்பறை யிலும் இருக்கலாம். அவர்களோடு குதியுங்கள்.

கட்டுரையாளர்: ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி

விக்கிரமங்கலம், அரியலூர் மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

5 hours ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்